சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா, ரஷித் கான்!

பேட்டிங்கில் விராட் கோலியும் பவுலிங்கில் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்

ஐசிசியின் புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பவுலிங்கில் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வென்று, தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதில் மொத்தம் விராட் கோலி 558 ரன்கள் குவித்தார். 112, 46*, 160*, 75, 36, 129* என ரன்களை குவித்து வெளுத்து வாங்கினார்.

இந்த நிலையில், ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில், விராட் கோலி 909 ரேட்டிங் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இது தான் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகளாகும். மேலும், 900-க்கும் மேல் ரேட்டிங் புள்ளிகள் பெறும் முதல் இந்திய பேட்ஸ்மேனும் விராட் கோலி தான்.

இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்று இருந்ததே, இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகளாக இருந்தது. தற்போது விராட் அதை ஓவர்டேக் செய்துள்ளார். குறிப்பாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1993ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசின் பிரைன் லாரா 908 புள்ளிகள் எடுத்த பிறகு, வேறு எந்த பேட்ஸ்மேனும் அதற்கடுத்ததாக அந்தப் புள்ளியைத் தாண்டவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதையும் விராட் பிரேக் செய்துள்ளார்.

உலகளவில் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 ரேட்டிங் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக விராட் கோலி 909 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளார்.

இதேபோல், பவுலிங்கில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தானின் இளம் ஸ்பின்னர் ரஷித் கான் ஆகியோர் தலா 787 புள்ளிகளுடன் ஒருநாள் பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இதில், 19 வயதே ஆன ரஷித் கான், இளம் வயதில் ஒருநாள் பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்கிற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க: ரஷித் கான் எப்படி முதலிடம் பிடித்தார்? பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் 19 வயதே ஆன ரஷித் கான்

×Close
×Close