players who endured a long century drought Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும், நட்சத்திர ஆட்டக்காரராகவும் வலம் வருபவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியில் 2008 ஆம் ஆண்டில் கால் பதித்த இவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரின் ரன்கள் குவிக்கும் வேகம் இவருக்கு "ரன் மெஷின்" என்கிற பட்டத்தை பெற்றுத் தந்தது.
ஆனால், 2019 நவம்பருக்கு பிறகு, கோலியின் ரன்கள் சேர்க்கும் மூர்க்கத்தனமான அதிரடி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புகளை உதறினார். அவரின் ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வு, அவரால் கணித்து ஆட முடியாதா தன்மை போன்றவற்றால் அவர் தொடர் விமர்சனங்களையும் சந்தித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அரைசதங்களை விளாசி வந்தார் கோலி. ஆனால், அவரின் 71வது சதத்திற்கான தேடல் மட்டும் நீடித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான், நடப்பு ஆசிய கோப்பை தொடரில், கடந்த வியாழக்கிழமை (8 ஆம் தேதி) அன்று நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து தனது 71 ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்தார் கோலி.
Thank you for all the love and support throughout the Asia Cup campaign. We will get better and come back stronger. Untill next time ❤️🇮🇳 pic.twitter.com/yASQ5SbsHl
— Virat Kohli (@imVkohli) September 9, 2022
ஏறக்குறைய மூன்று வருட (1021 நாட்களுக்கு) நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, சதம் விளாசிய கோலி டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தையும் நிறைவுசெய்து தனது சத தாகத்தை தீர்த்துக்கொண்டார். அந்த ஆட்டத்தில் மொத்தம் 61 பந்துகளை சந்தித்திருந்த அவர் 12 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தி இருந்தார்.
கோலி தனது சத தாக்கத்தை இறுதியாக தீர்த்துக்கொண்ட நிலையில், அவர் தொடர்ந்து பல மைல்கல்லை கடந்து இன்னும் பற்பல சாதனைகளை படைப்பார் என இந்திய அணி நம்புகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் கோலியைப் போல் இப்படி பிரபல மற்றும் நட்சத்திர வீரர்கள் தங்களின் சத தாகத்தை தீர்த்துக்கொள்ள போராடியது தெரியாத ஒன்று அல்ல. அவரைப்போல் நிறைய வீரர்கள் சதமடிக்க நீண்ட நாட்களை எடுத்துள்ளனர். சிலர் அதில் வெற்றி கண்டுள்ளனர். ஆனால், சிலர் அதைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்காமல் அப்படியே ஓய்வை அறிவித்துள்ளனர்.
அவ்வகையில், கோலியைப்போல் நீண்ட காலத்திற்குப் பிறகு தங்களின் சத தாகத்தை தீர்த்துக்கொண்ட 3 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டில் கோலிக்கு முன், சச்சின் டெண்டுல்கர் எனும் ஜாம்பவான் வீரர் வேடிக்கையாகவும், சர்வசாதாரணமாகவும் சதம் அடித்தவர். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அவரின் 17 வது வயதில் விளாசி மிரட்டி இருந்தார். 1990 ஆம் ஆண்டு ஓல்ட் ட்ராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசிய ஆட்டத்தில், டிராவை நோக்கி நகர்ந்த இந்திய அணியைக் காப்பாற்றினார்.
ஆனால், சச்சின், ஒருநாள் போட்டிகளில் சதமடிக்க ஐந்து வருடங்கள் (79 போட்டிகளை) எடுத்துக்கொண்டார். இறுதியாக கொழும்பில் இலங்கைக்கு எதிராக சச்சின் 130 பந்துகளில் 110 ரன்களை விளாசினார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
சச்சின், ஒருநாள் போட்டிகளில் சதமடிக்க நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டாலும், அதன்பிறகு அந்த ஃபார்மெட்டில் 48 சதங்களை பதிவு செய்து வரலாறு படைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- ஆடம் பரோர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் ஆடம் பரோர். 1990 ஆண்டுகளில் நியூசிலாந்து அணியின் அசைக்க முடியா தூணாக இருந்த இவர் 78 டெஸ்ட் மற்றும் 179 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த இரண்டு சதங்களுக்கு இடையே (ஆடிய போட்டிகளின் அடிப்படையில்) மிக நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட வீரர் என்கிற சாதனை படைத்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மழையால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் அவரது தனது முதல் சதத்தை விளாசி இருந்தார். மேலும், அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதன் பிறகு பரோர் சுமார் 6 ஆண்டுகள் இடைவெளியில், 57 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது இரண்டாவது மற்றும் இறுதி சதத்தை அடிதத்தார்.
- ஆண்டி ஃபிளவர்
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் ஆண்டி ஃபிளவர் ஆவார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இரண்டு ஒருநாள் சதங்களுக்கு இடையில் போட்டிகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் மிக நீண்ட இடைவெளியில் சாதனை சதம் அடித்த முதல் வீரர் என்கிற படைத்துள்ளார்.
இவர் தனது முதல் சதத்தை 1992 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளாசி இருந்தார். தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் அவரின் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் எடுத்துக்கொண்ட போட்டிகள் 148 ஆட்டங்கள் ஆகும்.
சுவாரஸ்யமாக, இலங்கைக்கு எதிரான அந்த இரண்டு ஆட்டங்களிலும் அவரின் அணி தோல்வி கண்டு இருந்தது. ஆனால், ஃப்ளவர் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.