காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நாளை தொடங்குகிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கையை நாளை எதிர்கொள்கிறது. அதேசமயம், இலங்கை தற்போது மிகவும் பலவீனமான அணியாக காணப்படுகிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, தனது சொந்த மண்ணில் இலங்கை தட்டுத் தடுமாறி விளையாடியதை நாம் மறந்துவிட முடியாது. அந்தளவிற்கு பலவீனமான இலங்கை அணியை, இந்தியா வீழ்த்தியதில் ஆச்சர்யம் இல்லை. இருப்பினும், இலங்கை வீறு கொண்டு எழுவதற்கும் வாய்ப்புள்ளது என்பதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும்.
நாளையப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் கேப்டன் விராட் கோலி இன்று பேசுகையில், "நான் நேற்று மைதானத்தைப் பார்த்தேன், புற்கள் சிறப்பாக உள்ளன. இதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்களை குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும். இந்த மைதானம் நிச்சயம் முடிவு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு அணியாக இதைப் போன்றதொரு விக்கெட்டை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த விக்கெட்டுகளில் விளையாடுவதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இரண்டாவது போட்டிக்கு அணியில் மாற்றம் இருக்குமா என்று கேட்டால், அதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது. முதலில் நாங்கள் ஒரு சிறந்த 11 பேர் கொண்ட அணியை ஆலோசித்து தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வோம். ஆனால், போட்டி நடைபெறும் தினத்தன்று பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
இன்று பிட்ச் ஒருமாதிரி இருக்கும். நாளை வேறுமாதிரி பிட்ச் மாறிவிட்டால், அதற்கு ஏற்றாற்போல் அணியில் மிகச்சில மாற்றம் இருக்கும். அப்படி மாற்றம் செய்யும் போது கூட, சிறந்த மாற்று வீரர்களைத் தான் நாங்கள் தேர்வு செய்வோம்.
லோகேஷ் ராகுலைப் பொறுத்தவரை, அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை உள்ளது. அதில் பாசிட்டிவான முடிவு கிடைக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அணிக்காக சிறப்பாக ஆடிவருகிறார். நிச்சயம், அவர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவார் என நம்புகிறேன். இருப்பினும் மருத்துவரின் அறிக்கைக்குப் பிறகு, அணியில் கலந்து ஆலோசித்து, அவர் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
குல்தீப் யாதவை களமிறக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நாளை பிட்ச் காணப்படும் தன்மையை பொறுத்துதான் எல்லாம் முடிவு செய்யப்படும். ஒருநாளைக்கு முன்னதாகவே, அணித் தேர்வுப் பற்றி கூற விரும்பவில்லை" என்றார்.
காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத இலங்கை கேப்டன் சன்டிமால் நாளைய போட்டியில் இடம் பெறுகிறார். இதேபோல திரிமானேயும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இருவரது வருகையால் அந்த அணி பேட்டிங்கில் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.