இருளை நோக்கி செல்கிறதா முகமது ஷமியின் கிரிக்கெட் எதிர்காலம்?

வீரர் ஒருவரின் சொந்தப் பிரச்சனைக்காக அவரது கரியரில் கை வைப்பது நல்லதல்ல

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மிக மோசமான காலக்கட்டம் நிச்சயம் இதுவாகவே இருக்க முடியும். மோசமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட!. கள்ளத் தொடர்பு, மேட்ச் பிக்ஸிங், கொலை முயற்சி, வேறு திருமணம் செய்ய முயற்சி, தேசத் துரோகம் என ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் வரிசையாக புகார்களை அடுக்கியுள்ளார், அடுக்கி வருகிறார்.. இனியும் அடுக்குவார் போல…! ஆரம்பத்தில் அனைவரும் குழம்பி நிற்க(போலீஸ் உட்பட), ஹசின் ஜகான் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் வெளியிட,  முகமது ஷமி மீது 498 A, 323, 307, 376, 506, 328, 34 ஆகிய பிரிவுகளில் கொல்கத்தாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், தன் மீதான அனைத்துப் புகார்களையும் மறுத்து வந்த முகமது ஷமி, மனைவியின் சில முக்கிய ஆதரங்களால் சற்றே பின் வாங்கியிருக்கிறார். இன்னமும், எது உண்மை? எது பொய்? என்ற முடிவுக்கு வர முடியவில்லை. போலீசாரின் விசாரணை இப்போது சற்று வேகமெடுத்துள்ளது.

ஷமி மீது அவரது மனைவி ‘வெளியிட்ட’ புகார் பட்டியலுக்கு பிறகு, பிசிசிஐ ‘வெளியிட்ட’ வீரர்களின் ஆண்டு வருமான ஒப்பந்த பட்டியலில், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்திய வீரர்களின் ஆண்டு வருமான ஒப்பந்தம் தயாரிக்கும் போது, ஷமி குறித்து வெளியான செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தோம். ஷமி குறித்து மிகவும் காரசாரமாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

‘ஒரு தரப்பினர், வீரர் ஒருவரின் சொந்தப் பிரச்சனைக்காக அவரது கரியரில் கை வைப்பது நல்லதல்ல’ என்றனர். மற்றொரு தரப்பினர், ‘கொலை முயற்சி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எப்படி ரிவார்ட் வழங்க முடியும்? இதுபோன்றவர்களை ஊக்குவிப்பது போன்று ஆகிவிடாதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், சமீபத்தில் பார் ஒன்றில் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதற்காக, இங்கிலாந்தின் முக்கிய ஆல்-ரவுண்டர் பென் ஸ்டாக்ஸ், ஆஷஸ் தொடரில் இருந்தே நீக்கப்பட்டார். ஆனால், அதன்பின் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் விவாதித்தோம். ஆனால், ஷமி விவகாரத்தில் ‘கொலை முயற்சி’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இந்திய சட்டவிதிப்படி இது non-bailable குற்றமாகும்.

இருப்பினும், ஷமியின் பெயரை ஒப்பந்தத்தில் வைத்திருந்தோம். அதன்பின், நிர்வாக கமிட்டி கேட்டுக் கொண்டதால், ஷமியின் பெயரை நீக்கினோம். இறுதியில், நீதிநெறியே வென்றது. முகமது ஷமி தன் மீதான புகார்கள் அனைத்தையும் க்ளீயர் செய்யும் வரை, அவரை தற்காலிகமாக ஒப்பந்தத்தில் இருந்து நீக்குவது என முடிவு செய்து நீக்கினோம்.

அன்று, வீரர்கள் ஊதிய ஒப்பந்தம் தயாரிக்கும் போது, ஷமி குறித்து நாங்கள் விவாதித்ததை கேப்டன் விராட் கோலியும், தலைமை கோச் ரவி சாஸ்திரியும் நன்கு அறிவார்கள். இன்னமும் அவர்கள் ஷமி விவகாரத்தை பாலோ செய்து வருகின்றனர். குறிப்பாக, விராட் கோலி ஷமியை விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஷமி மீதான புகார் வெளிவந்தவுடன், ரொம்பவும் அப்செட்டாக இருந்தார் கோலி ” என்று தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாது, வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஷமி ஆடவுள்ள நிலையில், அதிலிருந்து அவரை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி நிர்வாகம் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை.

முகமது ஷமி ஒரு அமைதியான கிரிக்கெட்டராகவே இதுநாள் வரை ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். இந்த விவகாரம், ஷமியின் சமூகதள ‘அட்மின்’ செய்த தவறாக இருக்கக் கூடாதா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close