நீங்க நினைக்குற பூஸ்ட் இல்ல.. இது வேற... தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று, அதுவும் தென்னாப்பிரிக்க மண்ணிலேயே வென்று கோப்பையைக் கைப்பற்றி இருப்பதெல்லாம் இந்திய அணியின் வேற லெவல் அச்சீவ்மென்ட்.
எப்படி இந்த வெற்றி சாத்தியம்? இதற்கு சில காரணங்களை பட்டியிடலாம். தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரரான டி வில்லியர்ஸ் முதல் மூன்று ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடாமல் போனது. முதல் போட்டியில் சதம் அடித்த கேப்டன் டு பிளசிஸ், காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியது. முன்னணி விக்கெட் கீப்பரான டி காக்கும் காயம் காரணமாக விலகியது... ஆம்லா, டுமினி, மில்லரின் ஃபார்ம் அவுட், விராட் கோலியின் சதப் பசி, ஸ்பின் ட்வின்ஸ்களான சாஹல், குல்தீப்பின் மிக மெதுவான பந்துவீச்சு என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால், கேப்டன் விராட் கோலி பிரஸ் மீட்டில் ஒரு காரணம் சொல்லி இருக்கார் பாருங்க.. அப்படியே 'கில்லி' படத்துல விஜய் சொன்ன மாதிரியே இருந்துச்சு...
இதுகுறித்து கோலி கூறுகையில், "ஒரு கிரிக்கெட் வீரரின் மன வலிமை என்பது மிக மிக முக்கியம். நீங்கள் என்ன தான் இரண்டு மாதங்களாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டாலும், மன வலிமை இல்லையென்றால், களத்தில் பருப்பு வேகாது. நீங்கள் முட்டாளாகி விடுவீர்கள். தினமும் மைதானத்திற்கு சென்று மணிக்கணக்கில் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமே இல்லை. மன வலிமை உறுதியாக இருந்தால், களத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ரிசல்ட் கிடைக்கும், இதுதான் எனது வெற்றியின் தாரக மந்திரம். இதைத் தான் நான் எப்போதும் பாலோ செய்கிறேன்" என்றார்.
இப்போ நியாபத்துக்கு வருதா 'கில்லி' படத்தின் அந்த சீன்? 'உடம்புல இருக்குற பலத்தை விட, மனசுல இருக்குற பலம் தான் பெருசு'-னு செமி ஃபைனல் மேட்சுல தோத்துட்டு ஃபைனல்-ல விளையாடப் போறதைப் பத்தி விஜய் பேசுவாரே!! ஆங்.. அதே தான்!