இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை (நவ.16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கேப்டன் விராட் கோலி பேசுகையில், தொடர்ச்சியாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நிறைய ஆட்டங்களில் விளையாடி வருகிறோம். தற்போது மீண்டும் டெஸ்ட் போட்டி மோடுக்கு திரும்புகிறோம். டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே சவால் நிறைந்தவையாக இருக்கும்.
ஒவ்வொரு தொடர் என்பதும் முக்கியமானது தான். அதனை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். இந்தியாவிலோ, அல்லது வெளிநாட்டிலோ எங்கு விளையாடினாலும், வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் வெற்றிப் பெற வேண்டும். இப்போது பெற்று வரும் வெற்றிகளை அடுத்தடுத்த தொடர்களிலும் தொடரவே விரும்புகிறோம் என்றார்.
இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து தொடர்களில் விளையாடுவதால், ரசிகர்களின் ஆர்வம் குறையாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கோலி, "கிரிக்கெட் போட்டிகளை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும், களத்தில் ஆடுபவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரே அணிக்கெதிரான தொடர் என்பதால், எந்த வீரரும் 'எனக்கு விளையாட பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது. கிரீசிற்குள் நிற்கும் போது, எனக்கு பேட் செய்ய ஆர்வமில்லை என்று நினைக்க முடியாது. அப்படி நினைத்தால், அது இந்திய அணியை தோல்விக்கு அழைத்துச் செல்லும். எங்களை பொறுத்தவரை எந்த அணியாக இருந்தாலும், 'நாட்டுக்காக ஆடுகிறோம்..வெற்றிப் பெற வேண்டும்' என்பது மட்டுமே நினைவில் இருக்கும். இருப்பினும், இது ஒரு நல்ல கேள்வி தான். ரசிகர்கள், கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வம் காட்டாமல் போனால் அது நல்லதல்ல. அவர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். நிச்சயம் இதுகுறித்து அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம்" என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, "ஒவ்வொரு வீரரும் ஆண்டுக்கு 40 கிரிக்கெட் போட்டிகள் விளையாடுகிறார்கள். நிச்சயம் அனைவருக்கும் ஓய்வு தேவை. தொடர்ச்சியான போட்டிகளால் அவர்களது உடல் நிச்சயம் ஓய்வை கேட்கும். ஆனால், போட்டியில் பங்கேற்று விளையாடுபவர்களுக்கும், பெஞ்ச்சில் இருப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அவர்களும் 40 போட்டிகளில் அணியில் இருந்தவர்கள் தான். ஆனால், யார் களத்தில் இருந்தார்கள், யார் பெவிலியனில் இருந்தார்கள் என்பதை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடினாலும், அவரது உடல் உழைப்பு அதிகம். ஏனெனில், அவர் அதிக நேரம் களத்தில் நின்றாக வேண்டும். நானும் ரோபோட் அல்ல. எப்போது எனது மனதும், உடலும் சோர்வாக காணப்படுகிறதோ, அப்போது நிச்சயம் நானும் ஓய்வு கேட்பேன். தொடர்ச்சியாக விளையாடுபவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு அவசியம். அப்படி ஓய்வு தரவில்லை எனில், முக்கியமான தொடர்களின் போது முக்கியமான வீரர்களை இழக்க நேரிடும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.