பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன் மனம் திறந்து பேசியுள்ளார் விராட். அமீர்கான் கேள்வி கேட்க, கோலி அதற்கு பதில் சொல்ல என இந்த நிகழ்ச்சி டாப் ஹிட் அடித்துள்ளது.
அமீர்கானின் கேள்விகளுக்கு பதிலளித்த கோலி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீரை புகழ்ந்து தள்ளியுள்ளார். உலகிலேயே எந்த பவுலர் உங்களது கெத்தை அசைத்துப் பார்த்தவர் என்ற அமீர்கானின் கேள்விக்கு பதிலளித்த கோலி, " கடந்த சில காலங்களாக பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமீர் தான்... உலகின் தலைசிறந்த மூன்று பவுலர்களில் நிச்சயம் அவரும் ஒருவர். அதுமட்டுமில்லாமல், எனது கிரிக்கெட் வாழ்க்கையில், நான் சந்தித்த மிக கடினமான பவுலரும் அவர் தான். அவர் பந்துவீச வந்தால், உங்களது உச்சக்கட்ட திறமையை வெளிக்கொணர்ந்து ஆட வேண்டும். மிகவும் சிறந்த பவுலர்! தெறிக்கவிடுபவர்!" என்றார்.
கோலியின் இந்த பாராட்டு குறித்து பதிலளித்துள்ள முகமது ஆமீர், "கோலி என்னை பாராட்டி, அன்றைய தினத்தை சிறப்பானதாக்கிவிட்டார். என்னைப் பற்றி அவர் சொன்னதெல்லாம், அவருடைய சொந்த கருத்து. இதுபோன்று பாராட்டுகள் வரும் போது, நிச்சயம் அது நம்மை ஊக்கப்படுத்தும். குறிப்பாக, கோலி போன்ற சூப்பர் ஸ்டார்களிடமிருந்து இதுபோன்று பாராட்டுகள் கிடைக்கும் போது, அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதேசமயம், எனது எந்த பாராட்டை தக்க வைக்க தொடர்ந்து நான் சிறப்பாக செயல்பட வென்றும் என்ற மிகப்பெரிய பொறுப்பும் எனக்கு உள்ளது. அவருக்கு மிகவும் நன்றி" என்று தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z572-300x217.jpg)
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போதும், ஆமீரை புகழந்திருந்த கோலி, "முகமது ஆமீர் பந்து வீச்சை நாம் பாராட்டியாக வேண்டும். அவர் பந்து வீசும் முறையை நான் நிச்சயம் ரசிக்கிறேன். அவருடைய ஸ்பெல்லை எதிர்த்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பவுலர்" என்று பாராட்டி தனது பேட் ஒன்றையும் ஆமீருக்கு பரிசாக வழங்கியிருந்தார் கோலி.
ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி, 5 ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் கடந்த ஆண்டு விளையாட வந்த ஆமீருக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கூட அந்த அளவிற்கு வரவேற்று இருக்க மாட்டார்கள். ஆனால், அப்போதே விராட் கோலி, ஆமீரை புகழ்ந்து அவரது திறமை குறித்தும் வியந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தினத்தை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அவ்வளவு மோசமான, சோக சண்டேவாக அது அமைந்தது. ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியில் ரோஹித், தவான், கோலி ஆகியோரை சொடுக்கு போடும் நேரத்தில் காலி செய்தவர் இதே ஆமீர் தான் என்பது கூடுதல் தகவல்.