இன்று(திங்கள்) ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையின் படி, இந்தய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இந்தியாவின் சார்பில் அதிக ரேங்கிங் புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையையும் விராட் தகர்த்துள்ளார். டி வில்லியர்சின் சதத்தால் கடந்த வாரம், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி, தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
நடந்துமுடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது. 28 வயதான இந்த டெல்லி வீரர் இத்தொடரில் 263 ரன்களை குவித்தார். இதனால், தற்போது 889 ரேங்கிங் புள்ளிகளை கோலி பெற்றுள்ளார். இந்திய பேட்ஸ்மேன் பெறும் அதிகபட்ச புள்ளிகள் இதுவாகும்.
இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றிருந்தது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது. 1998-ஆம் ஆண்டு இப்புள்ளிகளை சச்சின் பெற்றிருந்தார். அதை தற்போது கோலி முறியடித்திருக்கிறார்.
மேலும், கோலியைத் தவிர இந்தியாவின் தோனியும் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் சதமடித்த ரோஹித் ஷர்மா தரவரிசையில் முன்னேறவில்லை என்றாலும், தொடர்ந்து 7-வது நிலையிலேயே நீடிக்கிறார்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை, பாகிஸ்தானின் ஹசன் அலி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா தனது தரவரிசையில் சிறந்த நிலையாக 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசி.,க்கு எதிரான தொடரில் இவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
நியூசிலாந்தின் மிட்சல் சான்ட்னர் இரண்டு இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், பாகிஸ்தானின் இமாத் வாசிம் 14 இடங்கள் முன்னேறி 27-வது இடத்தையும் பிடித்தனர். ஆடம் மில்னே 11 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல், பெண்கள் தரவரிசையில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஒருநாள் போட்டியில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது ரேங்கிங் புள்ளிகள் 753. பெண்கள் பந்துவீச்சாளர் தரவரிசையில், இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 652 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.