இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
ஐந்தாம் இடத்தில் இருந்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆறாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
அதேபோல், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானும் இரண்டு இடங்கள் முன்னேறி, 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இன்னிங்ஸில் 94 ரன்கள் அடித்ததன் மூலம் தவான் தரநிலையில் ஏற்றம் பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தையும், புவனேஷ் குமார் 29-வது இடத்தையும் பிடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் புவனேஷ் குமாரின் சிறந்த தரநிலை இதுதான்.
இருப்பினும், ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சறுக்கியுள்ளார். கடந்த இலங்கை தொடரில் முதலிடம் பிடித்த ஜடேஜா, இந்த இலங்கை தொடரில், 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜா சில புள்ளிகளையும் இழந்துள்ளார்.