தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கும் இத்தொடர், டிசம்பர் 24-ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இத்தொடரில் இருந்து தனக்கு விடுப்பு அளிக்குமாறு கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யிடம் விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து, "தனிப்பட்ட காரணங்களுக்காக டிசம்பர் மாதம் தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உள்ளது" என்று பிசிசிஐ-யிடம் கோலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் கோலி, சில காலம் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது புதுப் பொலிவுடன் களமிறங்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
இன்று (திங்கள்) மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. அப்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியையும், இலங்கை மற்றும் போர்ட் பிரசிடன்ட் XI அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்திற்கான வீரர்களை தேர்வு செய்ய உள்ளது.
முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் தரம்சாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போட்டியில், ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில், விராட் தற்போது ஓய்வு கேட்டிருப்பதால், இலங்கைக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் கோலி விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 16-ஆம் தேதி நாக்பூரில் இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
நேற்று நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு பேட்டியளித்த கோலி, "தொடர்ச்சியான போட்டிகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். இது மிகவும் முக்கியமான ஒன்று. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து இப்போது தான் கிரிக்கெட் விளையாடுகிறது. இதனால் அவர்களுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைத்தது. மிகப் பெரிய தொடர்களின் போது, சிறப்பாக விளையாடுவதும், மோசமாக விளையாடுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருப்பதால், சுழற்சி முறையில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.