இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை பெங்களூருவில் சந்தித்து பேசினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வியாழக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
போட்டிக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய மகளிர் கிர்க்கெட் அணியின் சிறப்பான ஆட்டக்காரர்களான ஹர்மன் ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், இந்திய கிரிக்கெட் அணியின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்தே நன்றாக விளையாடினர். நூறாவது போட்டியில் விளையாடிய வார்னர், 103-வது பந்தில் சதமடித்தார். அதைத்தொடர்ந்து ஃபின்ச்சும் அரை சதமடித்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களும் நன்றாக விளையாட, 335 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில், 106 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து, கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.
இந்நிலையில், 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தன் வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணி 3 வெற்றியையும், ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.