கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில், நூலிழையில் இலங்கை தோல்வியில் இருந்து தப்பியது. முதல் இன்னிங்ஸில் சோடை போன இந்திய அணியின் பேட்டிங்கை, இரண்டாம் இன்னிங்ஸில் தனது சதத்தின் மூலம் தூக்கி நிறுத்தினார் கேப்டன் விராட் கோலி. லோகேஷ் ராகுலும், தவானும் 2-ஆம் இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கம் தந்ததையும் மறந்துவிட முடியாது.
இந்த நிலையில் பிசிசிஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கேப்டன் கோலி இரண்டாம் இன்னிங்ஸில் 84 ரன்கள் எடுத்திருந்த போது, பெவிலியனில் அமர்ந்திருக்கும் தலைமை கோச் ரவி சாஸ்திரியிடம், 'இப்போது டிக்ளேர் செய்யட்டுமா?' என்று செய்கை மூலம் கேள்விக் கேட்கிறார். இதற்கு சமிக்ஞ்சை மூலம் ரவி சாஸ்திரி பதில் சொல்கிறார்.
அதாவது, "இன்னும் நான்கு ஓவர்கள் விளையாடு அல்லது இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திவிடு" என்று அந்த செய்கை மூலம் தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்தே விராட் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். அது அவருடைய 50-வது சர்வதேச சதமாகவும் அமைந்தது.
இன்னும் 14 ரன்கள் எடுத்துவிட்டால் சதம் அடித்துவிடலாம் என நினைத்து, ஒரு கேப்டனாக தொடர்ந்து அவர் தகவல் கேட்காமலேயே விளையாடி இருக்கலாம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விரைவில் டிக்ளேர் செய்து, இலங்கையை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், டிக்ளேர் செய்வது குறித்து கோச்சிடம் கேப்டன் கோலி கேட்டது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதனால் தான் 'வாவ் கோலி!'.