மலிங்காவின் யார்க்கருக்கு பயந்துகொண்டே, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது களம் இறங்கினேன் என விராட் கோலி கூறியிருக்கிறார்.
மலிங்காவின் ஹேர் ஸ்டைலுக்கும், அவரது அபாரமான யார்க்கர்களுக்கும் சம அளவில் ரசிகர்கள் உண்டு. ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் துருப்புச் சீட்டு மலிங்காதான். இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் குவிக்க விரும்பும் எந்த பேட்ஸ்மேனும், மலிங்காவை சற்று எச்சரிக்கையுடன் அணுகுவார்கள்.
இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது எப்படியோ, ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவருக்கும் ரசித் மலிங்காவின் யார்க்கர் என்றால் பயம்தான்! 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டியில் மோதின. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான சச்சினையும், ஷேவாக்கையும் மலிங்கா காலி செய்தார்.
இன்று போல அன்று விராட் கோலி அதிக பிரபலமில்லைதான். அப்போது 4-வது வீரராக களம் இறங்கினார் அவர். மூன்றாவதாக களமிறங்கிய கவுதம் காம்பீருடன் இணைந்து இந்திய அணியை தூக்கி நிறுத்தவேண்டிய கடமை அப்போது அவர் முன்பு இருந்தது. இதற்காக மட்டையை சுழற்றியபடி மைதானத்திற்குள் வந்தபோதும்கூட, மலிங்காவின் யார்க்கர்கள் பற்றிய பயமே கோலியின் மனதில் இருந்ததாம்.
அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சிக்காக பாலிவுட் ஸ்டார் அமிர்கானுடன் உரையாடியபோது இந்தத் தகவலை விராட் கோலியே தெரிவித்தார். ‘ரொம்பவும் பதற்றத்துடன்தான் இருந்தேன். ஆனால் இரண்டு, மூன்று பந்துகளை சந்தித்த பிறகு சரியாகிவிட்டேன்’ என்றும் கூறியிருக்கிறார் கோலி.
இந்தப் போட்டியில் 35 ரன்கள் எடுத்த கோலி, காம்பீருடன் இணைந்து முக்கியமான தருணத்தில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இதில் இந்தியா வெற்றி பெற்றதுடன், கோப்பையை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் பல பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தி வரும் கோலி, சம காலத்து பந்துவீச்சாளர் ஒருவரின் பந்துகளுக்கு பயந்த கதையையும் வெளிப்படையாக கூறியிருப்பது பாராட்டுக்குரியது.