ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அப்போட்டியில், ஜொலித்த ரவிந்திர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து 7 விக்கெட் வீழ்த்தினார். மேலும், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், ரவிந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத்தள்ளி, ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ஜடேஜா 438 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஷாகிப் அல்ஹசன் 431 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 418 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதனிடையே, ரவிந்திர ஜடேஜாவிற்கு, அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 942 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். லோகேஷ் ராகுல் 737 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ஜடேஜா, ஆண்டர்சன், அஸ்வின் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். மொகமது ஷமி 20-வது இடத்திலும் உமேஷ் யாதவ் 22-வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 861 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2-வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 721 புள்ளிகளுடன் டோனி 12-வது இடம், 725 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் ஷிகர் தவான், 724 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் ரோகித் சர்மா என அடுத்தடுத்த இடங்களில் இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.
ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. 608 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார் இந்திய வீரர் புவனேஷ் குமார். இதேபோல 585 புள்ளிகளுடன் 20-வது இடத்தில் உள்ளார் அக்ஷர் படேல்.
732 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் முதலிடத்திலும், தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாகிர் 718 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க் 701 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. முதல் 20 இடங்களில் 240 புள்ளிகளுடன்13-வது இடத்தில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இருக்கிறார்.
353 புள்ளிகளுடன் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் 338 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 328 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.