இன்று வெளியான எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி ஒருநாள் பிரிவு தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் 3-வது இடத்தில் இருந்தார் கோலி. முதல் இடத்தில் டி வில்லியர்ஸும், இரண்டாம் இடத்தில் டேவிட் வார்னரும் இருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானிற்கு எதிராக 81 ரன்னும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 76 ரன்களும் விளாசியதை அடுத்து, கோலி தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.
68, 125, 78 என மானாவாரியாக அடித்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேசமயம், ரோஹித் 13-வது இடத்திற்கும், தோனி 14-வது இடத்திற்கும் சறுக்கியுள்ளனர். யுவராஜ் சிங் ஆறு இடங்கள் முன்னேறி 88-வது இடத்திற்கு வந்துள்ளார்.
பந்துவீச்சில் அஷ்வின் 20-வது இடத்திலும், புவனேஷ் குமார் 23-வது இடத்திலும், பும்ரா 43-வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 117 புள்ளிகள் பெற்று, முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. 119 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் நீடிக்கின்றது.
ஒருவேளை, வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி தோற்றால், 115 புள்ளிகள் பெற்று தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் வென்றால், 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடிக்கும். ஆனால், பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் தோற்றால், 116 புள்ளிகள் பெறும்.
அதேசமயம், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்றால், 119 புள்ளிகளுடன் இந்திய அணி தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். தோற்றால், 116 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்யும்.