ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. கால்பந்து ஆட்டத்தை போல வெறும் 90 நிமிடங்களில் ஒரு கிரிக்கெட் போட்டியே முடிந்துவிடும்.
முன்னாள் இந்திய அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், வெஸ்ட் இண்டீசின் 'ப்ரடேட்டர்' கிறிஸ் கெயில், முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் 'அதிரடி மன்னன்' சயீத் அஃப்ரிடி ஆகியோர் இந்த தொடருக்கு தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தொடரில் விளையாடவும் செய்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், டிசம்பர் 24-ஆம் தேதி முடிவடைகிறது. நான்கு நாட்களுக்கு மட்டும் இத்தொடர் நடைபெறுகிறது.
டி10 கிரிக்கெட் லீக் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், பஞ்சாபிஸ், பக்தூண்ஸ், மராத்தா, பங்களாஸ், லங்காஸ், சிந்திஸ், கேரளைட்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பக்தூண்ஸ் அணியின் கேப்டனாக அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி டி-10 லீக்கின் தலைவர் ஷாஜி உல் முல்க் கூறும்போது, ‘டி-10 கான்செப்ட் புதியது என்பதால் இதில் அதிக ஆர்வமாக இருக்கிறோம். இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடக்க இருக்கிறது’ என்றார்.