இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இருப்பினும் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.
வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியில், பந்து வழக்கத்தை விட அதிகமாக பவுன்ஸ் ஆகியது. அதோடுமட்டுமில்லாமல், பேட்ஸ்மேன்களையும் கடுமையாக தாக்கியது. குறிப்பாக, தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கர் முகத்தை பந்து தாக்கியது. இதனால், மூன்றாம் நாள் ஆட்டம் நடுவர்களால் நிறுத்தப்பட்டது. ஆனால், மறுநாள் தொடர்ந்து போட்டி நடைபெற்றது.
இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால், தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி தோற்றது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு கருத்து தெரிவித்த டீன் எல்கர், "மோசமான ஆடுகளத்தால் பேட்ஸ்மேன்களின் மீது பந்து தொடர்ந்து தாக்கியதால் மனஉறுதி சிதைந்து போனது. ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்பது தெரிந்த பிறகு, ஆட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் ஹியூக்ஸிற்கு ஏற்பட்ட நிலைமை, மீண்டும் நிகழ்ந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ஐசிசி-யின் மேட்ச் ரெஃப்ரீ ஆண்டி பைக்ராஃப்ட், "இறுதி டெஸ்ட் போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் மோசமான ஒன்று. இங்கு பந்துகள் தாறுமாறாக பவுன்ஸ் ஆகின்றன" என்று கூறி, வாண்டரர்ஸ் பிட்சுக்கு 3 தகுதியிழப்பு புள்ளிகளை வழங்கியுள்ளார்.
இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த மைதானம் மேலும் 2 தகுதியிழப்பு பெற்றால், அதாவது ஐந்து புள்ளிகள் பெற்றால், 12 மாதங்களுக்கு எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடத்த அனுமதி வழங்கப்படாது.