வார்னரின் மனைவியை கீழ்த்தரமாக விமர்சித்தாரா டி காக்? லீக்கான வீடியோ!

வார்னர் - டி காக் வார்த்தைப் போர்

டார்பனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 4) ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும், தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக்கிற்கும் நிகழ்ந்த வார்த்தை போர் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று நான்காவது நாள் ஆட்டத்தின் இடைவெளியின் போது, இரு அணி வீரர்களும் தங்களது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வார்னர், கேப்டன் ஸ்மித்துடன் பேசிக் கொண்டும், டி காக் மார்க்ரம் உடனும் பேசிக் கொண்டு வந்தனர்.

அப்போது, திடீரென ஆக்ரோஷமான வார்னர், மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த போதே டி காக்கை நோக்கி கோபமாக பேசினார். தொடர்ந்து அவர் டி காக்கை ஏதோ சொல்லி திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் பதற்றமான சூழல் அங்கு உருவாக, சக வீரர்கள் இருவரையும் தனித்தனியே அறைக்கு கொண்டுச் சென்றனர்.

வார்னரின் மனைவியான கேண்டிஸ் குறித்து டி காக் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்ததாகவும், இதனாலேயே வார்னர் கோபப்பட்டு அவரை கடுமையாக திட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது கேட்கவில்லை.

இந்த வீடியோ, இரு அணிகளின் நிர்வாகத்தின் கவனத்திற்கும் அங்கிருந்து ஐசிசிக்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இவ்விவகாரம் குறித்து ஆட்ட நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

×Close
×Close