ச. மார்ட்டின் ஜெயராஜ்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை முதல் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே, தொடரை சமன் செய்ய இந்தியா 2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வேட்கையுடன் களமாடியுள்ளது.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் ஆட களம் கண்டது. புனே ஆடுகளம் ஆட்டம் செல்ல செல்ல பேட்ஸ்மேன்களுக்கு தலைவலி கொடுக்கும். குறிப்பாக 4-வது இன்னிங்சில் பேட்டிங் ஆட மிகவும் கடிமானதாக இருக்கும். அதேநேரத்தில், ஸ்பின் பவுலர்களின் சொர்க்க பூமியாகவும் இது இருக்கிறது. இந்தியாவின் சுழற்பந்துவீச்சு வரிசையை மனதில் வைத்துக் கொண்டு, நியூசிலாந்து முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்து கணித்தது போலவே, இந்தியா 3 (ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின்) ஸ்பின் ஈட்டிகளுடன் வந்தது. தொடக்க ஓவர்களை ஆகாஷ் தீப் (6 ஓவர்) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (8 ஓவர்) ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்தார் கேப்டன் ரோகித். அதன்பிறகு, அஸ்வினை அழைத்து பந்துகளை சுழல விட சொன்னார். தனது வழக்கமான பாணியில் பந்துகளை பல கோணங்களில் சுழல விட்ட அஸ்வின் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் (15 ரன்கள்) விக்கெட்டை கைப்பற்றினார்.
தொடக்க ஜோடியை உடைத்ததில் உத்வேகம் கண்ட அவர், அடுத்து வந்த வில் யங் (18 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், அதன்பிறகு களத்தில் இருந்த தொடக்க வீர டெவோன் கான்வே - ரச்சின் ரவீந்திரா ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இந்த ஜோடி இந்திய பவுலர்களை திறம்பட சமாளித்தது. வலுவான பார்ட்னர்ஷிப்பை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த இந்த ஜோடியை உடைக்க வந்தார் அஸ்வின். அவரது சுழலில் சிக்கிய கான்வே 76 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதுவரை நடந்தது படத்தின் இடைவேளையுடன் முடியும் என்றால், கிளைமாக்சில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்க வந்தார் வாஷிங்டன் சுந்தர். பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவிய ரச்சின் ரவீந்திரா களத்தில் இருந்தார். அங்கு முதல் இன்னிங்சில் சதம் அடித்து 134 ரன்களையும், 2வது இன்னிங்சில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன்களையும் எடுத்து ஆட்ட நாயகனாக ஜொலித்தார். அவரது விக்கெட்டை அடுத்தடுத்த போட்டிகளில் சீக்கிரமே கைப்பற்றிட இந்தியா ஸ்கெட்ச் போட்டது.
அப்படி போட்ட ஸ்கெட்ச்சில் முதல் ஆயுதம்தான் வாஷிங்டன் சுந்தர். கடந்த வாரத்தில் உள்ளூர் போட்டியானது ரஞ்சி தொடரில் தமிழக அணிக்காக ஆடிக் கொண்டிருந்தார் வாஷிங்டன் சுந்தர். தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் அவர் சதம் விளாசி 152 ரன்கள் எடுத்தார். இதேபோல், பவுலிங்கில் முதல் மற்றும் 2வது இன்னிங்ஸ் என மொத்தமாக 6 விக்கெட்டை கைப்பற்றி மிரட்டியும் இருந்தார். அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கவுதம் கம்பீர், நியூசிலாந்துக்கு எதிராக இறக்கி விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய டெஸ்ட் அணிக்கு ஆடும் வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்ததால், அந்த வாய்ப்பை கச்சிதமாகவே பயன்படுத்திக் கொண்டார்.
நியூசிலாந்துக்கு அரணாக இருந்த ரச்சின் ரவீந்திராவின் (65 ரன்கள்) விக்கெட்டை முதலில் வீழ்த்தி தனது வருகை அறிவித்தார் வாஷிங்டன் சுந்தர். அடுத்த களம் புகுந்த டாம் ப்ளூன்டெல் (3 ரன்), டேரில் மிட்செல் (18 ரன்) ஆகியோரின் விக்கெட்டை சொல்லி வைத்தது போல் தூக்கிக் காட்டினார். மேலும் அவர், சில ஓவர்களுக்கு தாக்குப்பிடித்த மிட்செல் சான்ட்னர் (33) விக்கெட்டையும் கைப்பற்றினார். அடுத்து பேட்டிங் ஆட வந்த கிளென் பிலிப்ஸ் (9 ரன்), டிம் சவுத்தி (5 ரன்), அஜாஸ் பட்டேல் (4 ரன்) ஆகியோரது விக்கெட்டையும் வரிசையாக வீழ்த்தி, அவர்களை சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட செய்தார். அவரின் சுழலில் சிக்கி சிதறி ஓடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்சில் அவர் 4 மெய்டன் ஓவர்களுடன் 23.1 ஓவர்களை வீசி 59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் குலதீப் யாதவ் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, வாஷிங்டன் சுந்தரை அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கம்பீர். அவரது திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமல்லாது, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், கிடைத்த வாய்ப்பை சாதுரியமாகப் பயன்படுத்தி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். அணியில் இருக்கும் மற்ற எல்லா வீரர்களையும் விட அவர் டாப் வீரர் இல்லை என்றாலும், அவரிடம் புதைந்திருக்கும் ஆல்ரவுண்டர் திறன் அணிக்கு எப்போதும் உதவும். அதனை அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காலம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.