2023 India tour of West Indies Tamil News: இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நாளை புதன்கிழமை முதல் (12-ம் தேதி) தொடங்குகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் முதல் போட்டியாகும். இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. சமீபத்தில் டொமினிகாவில் நடந்த பயிற்சியில் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவர் தனக்கு இன்னும் வயதாகவில்லை என்றும், தன்னை இளம் வீரராகவே கருதுவதாகவும் அவர் கூறினார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா ரஹானே கூறியதைக் கேட்டு வயிறு குலுங்க சிரித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா பின்னர் ரஹானேவின் நிருபராக மாறி, கரீபியன் தீவுகளில் பேட்டிங் செய்வது குறித்த அவரது எண்ணங்கள் மற்றும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கான செய்தியைப் பற்றி கேட்டார்.
அப்போது பேசிய ரஹானே, "எல்லா இளைஞர்களுக்கும் எனது செய்தி என்னவென்றால், ஒரு பேட்டராக பொறுமையுடன் இருப்பது அவசியம். களத்தில் இருக்கும் போது அதிக கவனம் செலுத்துவதும், திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியம். எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் இன்னும் இளமையாக இருக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல ஐபிஎல் மற்றும் உள்நாட்டு சீசன் இருந்தது. நான் ஒரு பேட்ஸ்மேனாக தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில், எனது உடற்தகுதியிலும் நான் நிறைய உழைத்தேன்.
நான் எனது பேட்டிங்கின் சில அம்சங்களில் பணியாற்றியுள்ளேன். தற்போது, எனது கிரிக்கெட்டை ரசித்து வருகிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியம்.”என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil