ஒருவேளை சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிவிட்டால்?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் ஏற்பட்ட மோதல் உலகிற்கே தெரியும். ‘குழந்தைகளுக்கு கட்டளையிடுவது போல் நடந்து கொள்கிறார்’ என கோலியும், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என கும்ப்ளேவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ‘இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ போராடினோம், ஆனால் எங்களால் அதில் வெற்றிப்…

By: July 3, 2017, 5:38:07 PM

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் ஏற்பட்ட மோதல் உலகிற்கே தெரியும். ‘குழந்தைகளுக்கு கட்டளையிடுவது போல் நடந்து கொள்கிறார்’ என கோலியும், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என கும்ப்ளேவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ‘இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ போராடினோம், ஆனால் எங்களால் அதில் வெற்றிப் பெற முடியவில்லை’ என்று ஏதோ கணவன் மனைவியை சேர்த்து வைக்க போராடியதைப் போல் பிசிசிஐ பட்டும் படாமலும் பதில் சொன்னது. எது எப்படியோ, சாம்பியன்ஸ் சீரிஸ் முடிந்த உடனேயே, கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். போகும்போது, “கடந்த ஒருவருடமாக இந்திய அணி பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்” என்று பாராட்டி தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனமாக இருந்தது. கடந்த வருடம் 2016-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார். அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது. என்னதான் கோபம், வெறுப்புகள் இருந்தாலும், இவ்வளவு சிறுபிள்ளையாக கோலி நடந்து கொண்டது குறித்து பிசிசிஐ எதுவும் கருத்து கூறாமல் ‘கப்சிப்’ மோடிலேயே இருந்தது.

இந்த விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும்.  கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதற்கும் பிசிசிஐ ‘N காது K காது’ என்ற மோடில் தான் இருந்தது.

ஆனால், இனிமேல் தான் ‘மாஸ்’ சீன்களே காத்திருக்கிறது. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வீரேந்திர சேவாக். இந்த மனிதர் கிரிக்கெட் விளையாடும் போதிலும் அதிரடி பாணியை வெளிப்படுத்தினார். தற்போது ஓய்வு பெற்று, சமூக தளங்களில் தனது வெளிப்படையான கருத்துகள் மூலம் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். அதிரடி மட்டுமில்லாது, எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பதில் சொல்வதே சேவாக்கின் ஸ்டைல். அதுவும் உடனுக்குடன். பின்னால் நின்று பேசுவது, புறம் பேசுவது என்பதெல்லாம் இந்த மனிதனின் அகராதியிலேயே கிடையாது. தனக்கு எது சரி என்று படுகிறதோ அதுதான் அவரது தீர்க்கமான முடிவாக இருக்கும்.

இவ்வளவு ஏன்… இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி என்பது எவ்வளவு பெரிய பதவி. அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, தனது பயோ டேட்டாவில் வெறும் இரண்டே வரியில், தன் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு அதனைத் தான் சமர்ப்பித்தார். அதில், “ஐபிஎல்-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் உள்ளேன். இப்போதுள்ள இந்திய வீரர்களுடன் நான் ஆடியிருக்கிறேன்” என்று மட்டும் தான் குறிப்பிட்டிருந்தார். பிசிசிஐ-கே சேவாக்கிங் ரெஸ்பான்ஸ் இவ்வளவு தான்.

இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளரானால் என்ன ஆகும்? என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஸ்ட்ரிக்டாக இருந்தார் என்ற காரணத்திற்காக கும்ப்ளே வெளியேற்றப்பட்டார். ஒருவேளை சேவாக் பயிற்சியாளர் ஆனால், நிச்சயம் பிசிசிஐ பாடு திண்டாட்டம் தான். கேப்டன் கோலி, சேவாக்குடன் எந்தளவிற்கு இணக்கமாக செயல்படுவார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அணி தோற்கும் போதும், தொடரை இழக்கும் போதும், சேவாக்கின் நடவடிக்கை கண்டிப்பாக கடுமையாக இருக்கும். அப்போது கோலியின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் முறைத்தாலும், ‘போ..போ..’ என்ற ரீதியில் தான் சேவாக்கின் செயல்பாடு இருக்கும்.

இதையெல்லாம் முன்பே பிசிசிஐ யோசித்ததாலோ என்னவோ, விராட்டின் ‘செல்ல கோச்’ ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்திய அணியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின், கங்குலி, லக்ஷ்மன் தான் இறுதி வேட்பாளரின் பெயரை பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள். அணியின் நலனை கருத்தில் கொண்டு, அந்த குழு பரிந்துரை செய்தால் அணிக்கு நல்லது. இல்லையேல் அந்த ஒரு வீரருக்கு நல்லது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:What happen if sehwag will appoint as a coach of team india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X