Advertisment

எங்கே சென்றார் அந்த 'அதிரடி சூரன்' பால் வல்தாட்டி? அதிர்ச்சியடைந்த தோனி!

2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிகளை மிரள வைத்தவர் இந்த வலது கை பேட்ஸ்மேன் பால் வல்தாட்டி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
எங்கே சென்றார் அந்த 'அதிரடி சூரன்' பால் வல்தாட்டி? அதிர்ச்சியடைந்த தோனி!

ஞாபகமிருக்கிறதா இவரை..? கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக ஐபிஎல் ஃபேன்சிற்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். 2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிகளை மிரள வைத்தவர் இந்த வலது கை பேட்ஸ்மேன் பால் வல்தாட்டி. கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக கேப்டன் கில்கிறிஸ்ட்டுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வல்தாட்டி, முதல் பந்திலிருந்தே சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசி, கில்கிறிஸ்ட்டையே 'யார்ரா இவன்?' என ஆச்சர்யப் பட வைத்தார். 2.4 ஓவரிலேயே பஞ்சாப் அணியை 50 ரன்கள் கடக்க வைத்து சாதனைப் படைத்தார்.

Advertisment

அதிலும் குறிப்பாக, 2011-ல் சண்டிகரில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், 194 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில், தனி ஆளாக ருத்ரதாண்டவம் ஆடிய வல்தாட்டி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 120 ரன்கள் விளாசி, அணியை வெற்றிப் பெற வைத்து தோனிக்கு மிகப்பெரிய ஷாக்கினை கொடுத்தார்.

அதற்கு முன் வரை வல்தாட்டியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காத தோனி, அந்த ஆட்டம் முடிந்த பின், பிசிசிஐ தேர்வு குழுவிடம் இவரைப் பற்றிய முழு விவரத்தையும் கேட்டு அறிந்திருக்கிறார். அப்போது வல்தாட்டியின் வரலாறு குறித்து அறிந்த தோனி ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தார். ஆம்! பால் வல்தாட்டியின் கிரிக்கெட் வாழ்க்கை என்றைக்கோ சோகத்துடன் முடிந்திருக்க வேண்டியது.

2002-ல் U-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வானவர் பால் வல்தாட்டி. பார்த்திவ் படேல், இர்பான் பதான் ஆகியோர் இவரது சக வீரர்களாக இருந்தனர். அத்தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டி ஒன்றில், 5 ரன்களுடன் வல்தாட்டி பேட் செய்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பந்து அவரது வலது கண்ணை தாக்கியது. சுருண்டு விழுந்த வல்தாட்டியை மருத்துவமனையில் சோதனை செய்த போது, அவரது கண் மிகவும் மோசமாக பாதித்துள்ளதாகவும், இனி அவர் கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால், தனது வாழ்க்கையே வீணாகி விட்டதாக கருதி முடங்கிய வல்தாட்டியை, அவரது குடும்பத்தினர் தேற்றி, உற்சாகப்படுத்தி, அவரை மீண்டும் கிரிக்கெட் விளையாட வைத்திருக்கின்றனர். தொடர்ந்து எடுத்த கடும் பயிற்சிகளின் மூலம், ஐபிஎல் வாய்ப்பு கிட்டி, தோனிக்கு முன்பாக தோனி அணியையே பின்னிப் பெடலெடுத்தும்விட்டார்.

அதுமட்டுமில்லாமல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், 75 ரன்களும் குவித்து, 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராகவும் கெத்து காட்டினார் வல்தாட்டி. அத்தொடரில் 450 ரன்களுக்கும் மேல் குவித்தார்.

publive-image

ஆனால், அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென காணாமல் போன வல்தாட்டி, இன்று வரை ஐபிஎல் தொடருக்கு திரும்பவேயில்லை. இப்போது மனிதர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? என்று பார்த்தோமேயானால்..... இன்றும் அதே கிரிக்கெட் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஏர் இந்தியாவுக்காக!

கிரிக்கெட் மூலம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏர் இந்தியா நிறுவனத்தில் அவருக்கு வேலைக் கிடைத்தது. இதனால், தற்போது ஏர் இந்தியா அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இதுகுறித்து அவரே கூறுகையில், "2011-ல் என்னால் ஐபிஎல்-ல் சாதிக்க முடிந்த அளவு, 2012, 2013-ல் சாதிக்க முடியவில்லை. இதனால், எனக்கு வாய்ப்புகள் நின்றுப் போனது. எனவே, எனது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக கிரிக்கெட் ஆடி வருகிறேன். புல்லரிக்கும் தருணங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை என்றாலும், இந்த லோக்கல் போட்டிகள் என்றும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும்" என்கிறார் வருத்தமாக.

ஐபிஎல்-ல் வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகு, தனது நீண்டநாள் பெண் தோழியான கரோல் என்பவரை 2013-ஆம் ஆண்டு வல்தாட்டி திருமணம் செய்துக் கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இப்போது 'ஆராதனா' என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.

ஒரேயொரு நாளில் வந்து அட்டகாசம் செய்து காணாமல் போகும் ஈசலைப் போன்று, ஒரேயொரு ஐபிஎல் தொடரில், எதிரணிகளை அட்டகாசம் செய்து அதன் பின் காணாமல் போனாலும், ஒரு அபார திறமையுடைய இந்திய வீரருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படாமல் நாம் இழந்துவிட்டோம் என்பதே உண்மை!.

Ipl Kohli Kxip Paul Valthaty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment