உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் 2-வது இடம் பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியுடன் கலகலப்பான சந்திப்பை நடத்தினர். அப்போது, ‘உங்க டிரஸ் டிசைனர் யாரு?’ என வீராங்கனைகள் ஜாலியாக கேட்டனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆனாலும் இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீராங்கனைகளின் அசத்தலான ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை வென்றது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என வலுவான அணிகளை சாய்த்து 2-வது இடம் பிடித்த இந்திய பெண்கள் அணியினருக்கு நேற்று முன்தினம் (28-ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்திருந்தார். தேநீருடன் நடந்த இந்த சந்திப்பில் மோடியுடன் வீராங்கனைகள் உற்சாகமாக உரையாடினார்கள்.
முதலில் வீராங்கனைகளின் சாதனையை பாராட்டும் விதமாக அந்த அறையில் இருந்த அனைவரையும் கரகோஷம் செய்யச் சொன்னார் மோடி. இதுவே வீராங்கனைகளுக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியை நோக்கி, ‘ஆட்டத்தின் கிளைமாக்ஸ் தருணத்தில் ஏன் அவ்வளவு டென்ஷனாக இருந்தீர்கள்?’ என்று இயல்பாக கேட்டார் மோடி. பிறகு அவரே, ‘அந்த தருணத்தில் வெளியே அமர்ந்திருந்த வீராங்கனைகள் உற்சாகம் அளித்திருந்தால் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க முடியும்’ என அறிவுறுத்தினார். ‘தேசத்தின் இதயங்களை நீங்கள் வென்றுவிட்டீர்கள். கடந்த சில வாரங்களில் உங்கள் பெயர்களை தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போல மக்கள் உச்சரித்தார்கள்’ என கூறி வீராங்கனைகளை பெருமைப்படுத்தினார் மோடி.
அணியின் கேப்டன் மிதாலிராஜ், பிரதமரின் ‘டைம் மேனேஜ்மென்ட்’ ரகசியத்தைக் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்ட பிரதமர், வீராங்கனைகள் தங்களின் ‘கான்சென்ட்ரேஷனை’ அதிகப்படுத்த ரெகுலராக யோகா பயிற்சியை மேற்கொள்ளும்படி பரிந்துரைத்தார். ரெகுலராக ‘செஸ்’ விளையாடுவதன் மூலமாக பதற்றமான வேளைகளிலும் கூலாக முடிவு எடுக்க முடியும் என்றும் வீராங்கனைகளுக்கு மோடி உபதேசித்தார்.
பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய சூப்பர் ஸ்டாரான ஹர்மன்பிரீத் கவுர் எழுப்பிய ஒரு கேள்வி, மோடியை வாய்விட்டு சிரிக்க வைத்தது. ‘ஸ்பெஷலாக டிரஸ் டிசைனர் வைத்திருக்கிறீர்களா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு, ‘அகமதாபாத்தில் ஒரு டெய்லரிடம்தான் ஆரம்பத்தில் இருந்து துணி தைக்கிறேன். முன்பெல்லாம் 20 முதல் 25 ரூபாய்தான் அதற்கு கூலி வாங்கினார். இப்போது அந்தத் தொகையை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்திவிட்டார்’ என ஜோவியலாக மோடி பதில் சொன்னாராம். ‘ஆரம்பகாலங்களில் எனது துணிகளை தானே துவைத்து பயன்படுத்தினேன். முதலில் குர்தாவுக்கு நீளமான ஸ்லீவ்ஸ்களை பயன்படுத்தினேன். அவற்றில் சில சிரமங்கள் இருந்ததால் அதன்பிறகு, ஸ்லீவ்ஸ்களை நீளம் குறைவாக வைத்துக்கொண்டேன்’ என வீராங்கனைகளே எதிர்பாராத அளவுக்கு சகஜமாக மோடி உரையாடியிருக்கிறார். கடைசியில் முத்தாய்ப்பாக, ‘மீண்டும் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். ஆனால் உலக சாம்பியனாக அப்போது நீங்கள் வரவேண்டும்’ என வாழ்த்தி விடை கொடுத்தார் மோடி. விடைபெறுகிற நேரத்தில் மோடியுடன் குரூப் போட்டோ, செல்பி எடுத்துக்கொண்டனர் வீராங்கனைகள்!
இறுதி ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்து அசத்திய தொடக்க வீராங்கனையான பூனம் கவுர் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், ‘ஒரு தேசத்தை ஆளுவதில் உள்ள மன அழுத்தத்தை கையாளுவது குறித்து பிரதமரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், தியானமும் யோகாவும் தனக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பதாக கூறினார். சில மோட்டிவேஷன் அம்சங்களை எங்களுடன் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.’ என சந்தோஷப்பட்டார்.
மோடியின் இந்த அணுகுமுறை, விளையாட்டுத்துறைக்கு பூஸ்ட்!