இந்தியாவுக்கு தான்... அப்டின்னு டக்குனு சொல்லிட முடியாது. ஏன்னா... இது உலகக் கோப்பை இல்ல.. மினி உலகக் கோப்பை. உலகக் கோப்பையில் தான் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. சோ... நாம கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும். ஏன்னா அவங்க எப்போ நல்லா விளையாடுவாங்கனு அவங்களுக்கே தெரியாது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா நாளை (4-ந்தேதி) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இந்தப்போட்டி நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை தனது இரு பயிற்சி ஆட்டங்களிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது. அந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும் போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவிற்கு அதிகமாக உள்ளன.
அதேசமயம் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, சமீபகாலமாக அவர்களது ஆட்டங்கள் 'வாவ்' போட வைக்கும் அளவில் இல்லை. பல வீரர்களின் பெயர்களை சொன்னால், அப்படியா! யார் அவர்? என்பீர்கள். அந்தளவிற்கு, சில புதிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்தியாவிற்கு எதிரான போட்டி என்றாலே, கொஞ்சம் அதிகம் பூஸ்ட் குடித்துவிட்டு தான் அந்நாட்டு வீரர்கள் வருவார்கள். ஆகையால், அவர்களது அதிகபட்ச திறமையை நாளை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களது பலம், பலவீனம் இரண்டுமே, எப்போது சிறப்பாக விளையாடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என்பதுதான். நாம் முன்பே சொன்னது போல..!
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அக்ரம் கூட இந்தியா தான் வெற்றிப் பெறும் என்று கணித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், "சமீபகால செயல்பாடுகள் மற்றும் சரியான கலவையில் அணி அமைந்திருக்கும் விதத்தை பார்க்கும் போது, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக தெரிகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு இருக்கிறது. தங்களுக்குரிய நாளில், எந்த பந்து வீச்சையும் நொறுக்கி தள்ளி விடுவார்கள்.
பந்து வீச்சிலும் இந்தியாவை குறை சொல்ல முடியாது. ஸ்பின் பந்துவீச்சில் அஷ்வின், ஜடேஜாவும் (ஜடேஜா பவுலரா? அவர் ஆல்ரவுண்டர் என்பதையே மறந்துட்டோம்) பலம் சேர்க்கிறார்கள். வேகப்பந்தில், ஜஸ்பிரீத் பும்ரா என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அட்டகாசமாக யார்க்கர் வீசுகிறார். கிட்டத்தட்ட ‘பாகிஸ்தானி யார்க்கர்’ என்றே அழைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
அக்ரம் மட்டுமல்ல பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிவித்துள்ளனர்.
பயிற்சிப் போட்டியில், 94* ரன்கள் விளாசிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், "இந்தியா -பாகிஸ்தான் போட்டி நிச்சயம் விறுவிறுப்பு நிறைந்த முழுமையான கிரிக்கெட்டாக இருக்கும்" என்றார்.
The team that handles pressure better will do well. I am sure it will be a great game: @DineshKarthik weighs in on the #INDvPAK clash. #CT17 pic.twitter.com/srpY0kaizi
— BCCI (@BCCI) 3 June 2017
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த யுவராஜ் சிங்கை பயிற்சியின் போது நம்மால் பார்க்கமுடிந்தது. இருப்பினும், நாளைய போட்டியில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகமே.
ஆடும் லெவன் மாதிரி இந்திய அணி:
ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங் \ தினேஷ் கார்த்திக், மஹேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா.
அதுசரி... பாகிஸ்தான் கேப்டன் யார் தெரியுமா? சர்ஃபராஸ் அஹமது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.