இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு? ஓர் அலசல்....

ஆக்ரோஷமோ, புல்லரிக்க வைக்கும் ஆட்டங்கள் என்பது மிக மிக குறைவே....

ஒருவழியாக 10-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்தாச்சு. பெரிய பரபரப்பு… மிகப் பெரிய எதிர்பார்ப்பு…. என்று பெரிதாக எதுவுமில்லை இத்தொடரில். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் கூட, மும்பை – புனே ஆட்டத்தை தவிர பெரிதாக எந்த பரபரப்பும் இல்லை… காரணம் சில அணிகளின் மிக மோசமான பெர்ஃபாமன்ஸ் தான். குறிப்பாக பெங்களூரு, குஜராத் போன்ற அணிகள் எந்தவித எதிர்ப்புமின்றி மற்ற அணிகளிடம் சரண்டர் ஆகின. மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் ஆகிய அணிகளே ஆதிக்கம் செலுத்தின. அதிலும் ஆக்ரோஷமோ, புல்லரிக்க வைக்கும் ஆட்டங்கள் என்பது மிக மிக குறைவே.

சரி! இப்போ விஷயத்திற்கு வருவோம். நாளை (ஞாயிறு) ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மும்பை – புனே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி குறித்த வெற்றி வாய்ப்புகளை இங்கே பார்ப்போம்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே சூப்பர் ஜெயண்ட் அணி, தொடரின் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறியது. பிளேஆஃப் சுற்றில் புனே இடம்பெறும் என கணித்தவர்கள் மிகக் குறைவாகவே இருக்க முடியும். ஆனால், அதன்பின் வரிசையாக ஆட்டங்களை வென்று, தரவரிசையில் 2-வது அணியாக இடம்பெற்று கம்பீரமாகவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

புனேவின் இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என்னவென நாம் ஆராய்ந்தால், அதில் நமக்கு கிடைக்கும் பதில் ‘திடீர் எழுச்சி’. ஆம்! தொடரின் ஆரம்பத்தில் சுமாராக ஆடிக் கொண்டிருந்த மகேந்திர சிங் தோனி, புனேவில் நடந்த ஹைதராபாத்திற்கு எதிரான லீக் போட்டியில், இறுதிக் கட்டத்தில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி அணிக்கு ‘த்ரில்’ வெற்றி தேடித் தந்தார். இதுதான் புனேவின் திடீர் எழுச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது.

மற்றொரு எழுச்சியும் யாரும் எதிர்பார்க்காதது தான். புனே வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் தான் அந்த எழுச்சி. சுமாராக பந்துவீசி வந்த உனட்கட், புதிய புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த ஆட்டங்களில் பந்துவீசத் தொடங்கினார். குறிப்பாக டெத் ஓவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பந்துவீசினார். இவருக்கு பக்க பலமாக, அனுபவ வீரர் இம்ரான் தாஹிர் கைக்கொடுக்க, பந்துவீச்சில் மெல்ல மெல்ல ஸ்ட்ராங்கானது புனே.

இப்போது நாம் பார்க்கப்போகும் எழுச்சி, புனேவிற்கு மட்டுமல்ல… இந்திய அணிக்கே நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஷ்வினிற்கு பதிலாக சேர்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ‘நம்பிக்கை நட்சத்திரம்’ ஆக உருவாகிக் கொண்டிருக்கும் வீரராக உள்ளார். சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

புனேவின் மற்றொரு புதிய சக்தியாக உருவெடுத்திருப்பவர், தொடக்க வீரர் ராகுல் திரிபாதி. எப்பேற்பட்ட அணியாக இருந்தாலும், 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்துவிட்டு சென்றுக் கொண்டே இருக்கிறார். இதனால், எப்படியும், 10 ஓவர்களில் 85 ரன்களை தொட்டுவிடுகிறது புனே அணி.

மற்றபடி வாங்கிய சம்பளத்திற்கு சிறப்பாக வேலைப் பார்த்த இம்ரான் தாஹிர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டு அணிக்கு பணியாற்ற சென்றுவிட்டது புனே அணிக்கு பின்னடைவு தான். இருப்பினும், மும்பைக்கு எதிரான பிளேஆஃபில், புனே ஆடிய விதத்தை பார்க்கும் போது, மும்பையை சமாளித்துவிடும் என்றே தோன்றுகிறது.

மும்பை இந்தியன்ஸ்:

ஆரம்பம் முதலே சீராகவும், எளிதில் வெல்ல முடியாத அணியாகவும் இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி தான். ரோஹித், பார்திவ், ராணா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருனல் பாண்ட்யா ஆகிய அனைவருமே அதிரடிக்கு பஞ்சம் வைக்காதவர்கள் தான். இதில் சிலர் மேட்ச் விண்ணர்களும் கூட. பந்து வீச்சிலும் கரண் ஷர்மா, மலிங்கா, ஜான்சன், மெக்லினீகன் என்று பலமாகவே உள்ளனர். இந்த அணியை வெல்ல வேண்டுமெனில், எதிரணியிடம் திறமையான, புத்திசாலியான பவுலர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், மும்பை பேட்ஸ்மேன்கள் தாங்களாகவே தூக்கி தூக்கி கேட்ச் கொடுத்து வெளியேற வேண்டும். மற்றபடி, இந்த அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இந்த ஐபிஎல் தொடரில், சந்தித்த மூன்று போட்டிகளிலும், புனே மும்பையை வீழ்த்தியுள்ளது. அதை வைத்துக் கொண்டு, இந்த இறுதிப் போட்டியை முடிவு செய்ய முடியாது. மும்பையை வீழ்த்த வேண்டுமெனில், புனே ஒட்டுமொத்தமாக சிறப்பாக செய்லபட வேண்டும். பேட்ஸ்மேன்கள் மிகவும் அக்ரெசிவாக ஆட வேண்டும். முடிந்த அளவு ரன்களைக் குவிக்க முயற்சிக்க வேண்டும். வெறும் 160, 170 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு, மும்பையை கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது தவறு. அதான் தோனி இருக்காரே.. ஸ்மித்துக்கு அட்வைஸ் சொல்ல… அது புனேவிற்கு சாதகமாக அமைய நிறைய வாய்ப்புண்டு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close