புதிய இந்திய கோச் அறிவிக்க அரங்கேறிய நாடகம் ஏன்? பின்னணி தகவல்கள்!

ஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க, ஏன் இந்த கண்ணாமூச்சு ஆட்டம் நேற்று நடத்தப்பட்டது? என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி உட்பட 10 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஆறு பேரை மட்டும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இறுதி நேர்காணலுக்கு அழைத்தது. இந்த ஆலோசனை கமிட்டிக்கு தான், இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. இதில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகிய மூன்று பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், ஆறு பேரிடமும் கடந்த ஜுலை 10-ஆம் தேதி(நேற்றுமுன்தினம்) நேர்காணல் நடத்தப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும் என ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர் கங்குலி அறிவித்தார். அதன்படி, ஜுலை 10 அன்று ஆறு பேரிடமும் மும்பையில் நேர்காணல் நடத்தப்பட்டது. யார் கோச் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ‘இன்று முடிவு அறிவிக்கப்படாது’ என கங்குலி திடீரென தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியவுடன், அவரிடம் ஆலோசனை நடத்திய பின், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

இந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு(COA), கோச் யார் என்பதை இன்றே(ஜுலை 11) அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு நேற்று அறிவுறுத்தியது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அவருடன் ஆலோசனை நடத்தி இன்றே கோச்சை அறிவிக்க வேண்டும் என தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து மீடியாவிலும் செய்தி வெளியானது. இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில், பிசிசிஐ இந்த தகவலை மறுத்தது. பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்த பேட்டியில், “புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்றார்.

அடுத்த சில மணி நேரங்களில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பவுலிங் பயிற்சியாளராக ஜாஹீர் கானும், முக்கியமான வெளிநாட்டு தொடர்களின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

ஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க, ஏன் இந்த கண்ணாமூச்சு ஆட்டம் நேற்று நடத்தப்பட்டது? என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த தகவலில், “இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி இடையே கடும் போட்டி நிலவியது. ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிப்பதில் கங்குலிக்கு ஆர்வமே இல்லை என கூறப்படுகிறது. சேவாக் தான் அந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கே முழு ஆதரவு அளித்திருக்கிறார். சேவாக்கை அவர் பொருட்படுத்தவில்லையாம். விராட் அளித்த பரிந்துரை காரணமாக தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில், சச்சின் தான் கங்குலியை சமாதானம் செய்திருக்கிறார். அணியின் முடிவுக்கே மதிப்பளிக்க வேண்டும் என்று கங்குலிக்கு சச்சின் அறிவுறுத்தியிருக்கிறார். இருப்பினும், பந்து வீச்சாளர் நியமனத்தை பொறுத்தவரை பாரத் அருணை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜாகீர் கானை கங்குலி நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கதிகளால் தான், பயிற்சியாளர் அறிவிப்பு குறித்து நேற்று இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close