சிறப்பு கட்டுரை: ஏன் விராட் கோலிக்கு பதிலாக வேறொருவரை இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கக் கூடாது?

சக வீரர்களின் உள்குத்து, தலைக்கு மேல் தொங்கும் கத்தி என எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து சாதிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கேப்டன்களிடம் உள்ளது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தின் கருத்து ஒன்று இந்த தலைப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஸ்மித் கூறுகையில், “இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு பதிலாக ஏன் வேறொருவரை கேப்டனாக நியமித்து, கோலி மீதான பணிச்சுமையை ஏன் குறைக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்மித்தின் இந்த கருத்தை, விராட் கோலியின் ரசிகனாக இருந்தால், ‘விராட் கோலி தான் என்றும் கேப்டன்’ என்று சொல்லி நகரலாம்… இந்திய கிரிக்கெட் அணியை நேசிக்கும் ரசிகனாக இருந்தால், ‘டீம் தோற்றால் உடனே கேப்டனை மாத்திடுவீங்களா?’ என்று கேட்டு விலகலாம்…. ஆனால், டெஸ்ட் போட்டியைக் கூட வெறித் தனமாக பார்க்கும் கிரிக்கெட் ரசிகனாக இருந்தால், எளிதில் இந்த கருத்தை புறந்தள்ளிவிட்டு கடந்துவிட முடியாது.
இந்திய அணியின் கேப்டன் பதவி என்பது, உலகின் வேறு எந்த கிரிக்கெட் அணி கேப்டனின் பதவியை விட மிகக் கடுமையானது, அழுத்தத்திற்கு உரியது. இங்கே, கேப்டன் என்றால், அனைத்துப் போட்டிகளிலும் வென்றுக் கொடுத்தே தீர வேண்டும். இல்லையெனில், நிலைமை மோசம் தான். இதனால், ஆளானப்பட்ட சச்சினால் கூட கேப்டனாக சாதிக்க முடியவில்லை.

சக வீரர்களின் உள்குத்து, அதீத பொறாமை, தலைக்கு மேல் தொங்கும் கத்தி என எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து சாதிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கேப்டன்களிடம் உள்ளது.

நவீன கால கிரிக்கெட்டில் இதனை மிகச் சரியாக செய்தது மகேந்திர சிங் தோனி மட்டுமே. இதனால் தான் மிக நீண்ட காலத்திற்கு அவரால் கேப்டனாக கோலோச்ச முடிந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அவரது நிலையும், சொல்லிக் கொள்ளாமல் கேப்டன் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டது தனிக்கதை.

தோனி, இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த காலம் அது. ‘கூல்’ கேப்டன் என பெயர் பெற்றவர், உலகின் மற்ற அணி வீரர்கள் சிலர் கூட தோனியின் தலைமையில் விளையாட விரும்புவதாக கூறிய பெருமை கொண்டவர்…. இக்கட்டான சூழ்நிலைகளை திறம்பட கையாண்டவர்… இப்படி பல சிறப்பம்சங்கள் இருந்தும் தோனியின் கேப்டன்சி சரியத் தொடங்கியது எதனால்?.

கடந்த பத்தியின் முதல் வரி தான் அதற்கு பதில். ஆம்! மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த தோனியால், அழுத்தங்களை சிறப்பாக கையாள தெரிந்த தோனியால், ஒருக்கட்டத்தில் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், வெற்றி, தோல்வி மாறி மாறி வரத் தொடங்க, டி20 போட்டியில் ஏன் தோற்றோம்? என்று ஆராய்வதற்குள், டெஸ்ட் போட்டியில் தோல்வி. டெஸ்ட் போட்டியை இழந்துவிட்டோமே என்று நினைப்பதற்குள் ஒருநாள் போட்டியில் தோல்வி. எதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. எவ்வளவு நாட்களுக்குத் தான் ‘பிராசஸ்’ என்று சமாளித்துக் கொண்டே இருக்க முடியும்?.

இப்போது அதே போன்றதொரு முத்தரப்பு ஆளுமையாக உருமாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் அதுவும் இந்திய மண்ணில் 2017 டிசம்பர் மாதம் இரட்டை சதம் அடித்ததற்காக, ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில், அதுவும் தென்னாப்பிரிக்க மண்ணில் வாய்ப்பு தருகிறார் கோலி. கேட்டால், ‘கரண்ட் ஃபார்ம் தான் முக்கியம்’ என்கிறார்.

இங்குதான் விராட் கோலி சறுக்குகிறார். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியவர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதனடிப்படையில் கோலி முடிவு செய்தார்? இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதே தென்னாப்பிரிக்க தொடரில், நிச்சயம் ரோஹித் ஷர்மா ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் சதம் அடிப்பார் என்பது உறுதி!

ஒரு பேட்ஸ்மேன் பந்தை ஃ பிளிக் செய்வதை வைத்தே, அவர் ஒருநாள் மோடில் இருக்கிறாரா அல்லது டெஸ்ட் மோடில் இருக்கிறாரா என்பதை கேப்டனால் எளிதில் கணித்து விட முடியும். ஆனால், விராட் இதை ஏன் செய்யவில்லை?

சரி! இதற்காகத் தான் விராட் கோலியை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றி, வேறு ஒருவருக்கு அந்த பொறுப்பை தர வேண்டும் என கூறுகிறோமா? இல்லை. பணிச் சுமைகளை பிரிக்கும் போது, கோலியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே நமது எண்ணம்.

இப்படி யோசித்துப் பாருங்கள், டெஸ்ட் கேப்டன்ஷிப்பை ரஹானேவிடம் கொடுத்துவிட்டு, ஒருநாள், டி20ல் கோலி கேப்டனாக தொடர்ந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம், கேப்டனாக அவரது சுமை குறையும், வீரராக அவரது ஆட்டத்திறன் மேலும் வலுவடையும்.

ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணியில் நிலவும் ‘சூப்பர் ஸ்டார்’ கலாச்சாரத்தை வேரறுக்கும் வரை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றிகளை நம்மால் வசப்படுத்தவே முடியாது.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே இறுதியில் நமக்கு தேவையான இலக்கு!. அதற்கு, இந்த முயற்சி உதவுமெனில், அதைச் செய்வதில் தயக்கம் தேவையில்லை!.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why dont bcci change virat kohli from test captainship

Next Story
வங்கதேசத்தின் தமிம் இக்பால் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com