இந்தியா, இலங்கை இடையே நேற்று நடைபெற்ற முதல் டி2௦ போட்டியில், இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. இதில் தவானின் மிக அபாரமான இன்னிங்ஸும் அடங்கும். 49 பந்துகளில் 90 ரன்களை விளாசினார் மனுஷர். ஆனால், இந்தியாவின் இறுதி ஸ்கோர் 174 மட்டுமே. ஸ்கோர்போர்டை பார்த்தால் இந்த ரன் குறைவிற்கு நாமே காரணம் சொல்லிவிடலாம். மனீஷ் பாண்டே 35 பந்துகளில் 37 ரன்களும், ரிஷப் பண்ட் 23 பந்தில் 23 ரன்னும் எடுத்ததின் காரணமாகவே, இந்தியா இந்த ஸ்கோரோடு முடங்கியது.
இவர்கள் இருவரும் மட்டுமே 58 பந்துகளை எடுத்துக் கொண்டனர். ஆனால், அடித்தது என்னவோ 60 ரன்களே. அதாவது, கிட்டத்தட்ட இந்திய அணியின் பாதி இன்னிங்ஸில் விளையாடிய இவர்கள் 60 ரன்கள் மட்டும் எடுக்கவே, இந்தியா நேற்று தோற்க நேரிட்டது.
இதில், ரிஷப் பண்ட் நமக்கு யுவராஜ் சிங்கை அப்படியே எதிரொலித்தார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் அதிரடியில் சூரர் என்பது நமக்கு தெரியும். 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்டவர். இது ஜஸ்ட் சாம்பிள் தான். பல ஆட்டங்களில் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, மிக டஃப்பான அணிகளுக்கு எதிராக வெற்றியை தேடிக் கொடுத்தவர் யுவராஜ் சிங்.
ஆனால், யுவராஜை நன்கு ஃபாலோ செய்திருந்தால் இதை கவனித்திருக்க முடியும். சில ஆட்டங்களில் யுவராஜின் அதிரடி சுத்தமாக எடுபடாமல் போயிருக்கும். யுவராஜா இது? என்று நாம் ஆச்சர்யப்படும் அளவிற்கு மோசமாக அன்று சொதப்புவார். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில், 2014ல் நடந்த டி2௦ உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சற்று ரீவைண்ட் செய்து பாருங்கள். அதில், இந்தியாவும் இலங்கை மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெறும் 130 ரன்களே எடுத்தது. அதில் யுவராஜ் சிங் 21 பந்துகளை சந்தித்து 11 ரன்களே எடுத்தார்.
பொதுவாக, யுவராஜ் மட்டும் இப்படி தடுமாறுகிறாரா? என்று நீங்கள் கேட்டால் 'இல்லவே இல்லை' என்பது தான் பதில். நம்ம 'தல' தோனி, ஸ்லோ பேட்டிங்கில் கதற கதற ரெக்கார்ட் வைத்துள்ளார். ஆனால், இங்கு ரிஷப் பண்ட், யுவராஜ் சிங்கை போன்று ஒரு மகா அதிரடி சூரர். இடது கை பேட்ஸ்மேனும் கூட!. ஆனால், நேற்று அவரால் 23 பந்தில் 23 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணியால் 200 ரன்களை கடக்க முடியாமல் போனதற்கு, இவரின் ஸ்லோவான இந்த இன்னிங்ஸ் தான் முக்கிய காரணம். அடுத்தடுத்து முதல் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்ந்ததால், மனீஷ் பாண்டே மெதுவாக ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் மனீஷ் பாண்டேவை இங்கு குறை சொல்ல முடியாது.
இருப்பினும், ரிஷப் பண்ட் அதிரடியில் மாஸ் காட்டக் கூடிய வீரர் என்பதில் சந்தேகம் தேவையில்லை. யுவராஜை போன்று சில இன்னிங்ஸில் அவர் தடுமாறினாலும், அதே யுவராஜ் காட்டிய வாணவேடிக்கையை இவராலும் காட்ட முடியும்.
இது ஒருபக்கம் இருக்க, இத்தொடருக்கான இந்திய பவுலர்களின் நிலையம் சற்று கவலைக்கிடமாகவே உள்ளது. ஷர்துள் தாகூர் இதுவரை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நேற்று அவர் வசமாக குசல் பெரேராவிடம் சிக்கிக் கொண்டதை பார்த்த போது, நமக்கே பரிதாபமாக தான் இருந்தது. ஜெயதேவ் உனட்கட்டின் லைன் அன்ட் லென்த் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள இந்திய வீரர் இவர் தான்.
ஆனால், தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கரின் பவுலிங் சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக, விஜய் ஷங்கரின் 'நிறுத்தி' பவுல் செய்யும் ஸ்டைல் வரவேற்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, நேற்றைய போட்டியில், இந்தியா பெரிதாக ஒன்றும் தவறு செய்துவிடவில்லை.
இந்திய இளம் பேட்ஸ்மேன்களின் அனுபவமின்மையால் ஏற்பட்ட ஸ்லோ பேட்டிங்கும், நல்ல அம்சமான பிட்சில், அதே அனுபவம் இல்லாத இளம் பவுலர்கள் கொண்டு குஷல் பெரேராவை அடிக்க விட்டதுமே இந்தியாவின் தோல்விக்கு காரணம்.
கடைசியாக, 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை, இந்தியாவை டி2௦ போட்டியில் வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு, ஏழு போட்டிகளில் வென்ற இந்தியா, 2 ஆண்டுகள் கழித்து இப்போது தான் தோற்றுள்ளது.
இதே மைதானத்தில் தான் இந்த முத்தரப்பு தொடர் முழுவதும் நடைபெற உள்ளது. இதனால், நிச்சயம் கேப்டன் ரோஹித் ஷர்மா 'என்ன செய்தால் இங்கு பிழைக்கலாம்' என்பதை இந்நேரம் நன்கு புரிந்து வைத்திருப்பார். ஏனெனில், டி2௦ போட்டிகளில் கேப்டனாக ரோஹித் ஷர்மா ஒரு 'வித்தகர்' என்பது அனைவரும் அறிந்திராத ஒன்று!.