விராட் கோலியை விட ஃபிட்டஸ்ட் பிளேயருக்கு ஏன் அணியில் இடமில்லை?

ரோஹித் ஷர்மா இப்போது நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார், மாற்றுக் கருத்து இல்லை... ஆனால், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடக்கப் போவது இந்தியாவில்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகுர் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

முரளி விஜய் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கருண் நாயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பும்ரா, புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், ‘இந்திய அணியின் மிகவும் ஃபிட்டான பிளேயர் நான் தான்’ என கருண் நாயர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கிரிக்பஸ்-க்கு அளித்த பேட்டியில், “எங்களது பயிற்சியாளர் ஷங்கர் பாஸு, பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் ஆகியோரிடம் நான் அதிக நேரம் செலவிட்டு வருகிறேன். நிறைய வலைப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். ஷங்கர் பாஸுவை பொறுத்தவரை, இப்போதைக்கு அணியின் நான் தான் ஃபிட்டஸ்ட் பிளேயர். இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் இதனை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எதனடிப்படையில் கருண் நாயர் இப்படியொரு பேட்டி அளித்தார் என்பது தெரியவில்லை. யோ-யோ டெஸ்ட்டின் மதிப்பெண்ணை வைத்து அப்படிச் சொன்னாரா என்பதும் விளங்கவில்லை. ஆனால், இப்படி வெளிப்படையாக அவர் சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்திய அணியில் விராட் கோலியை விட ஃபிட்டஸ்ட் பிளேயராக கருண் உள்ளார் என்றே அர்த்தம். ஆனால், அவருக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு தரப்படவில்லை.

இங்கிலாந்து தொடரிலாவது அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். ஆனால், இப்போது அணியிலேயே இல்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தேர்வாளர்களின் முடிவுகளில் நாம் தலையிட விரும்பவில்லை. ஆனால், அணியிலேயே ஃபிட்டாக இருக்கும் வீரரை டெஸ்ட் போட்டியில் இருந்தே நீக்கியிருப்பது ஏன் என்பது தான் மர்மமாக உள்ளது.

இதுகூட பரவாயில்லை… ‘ரோஹித் ஷர்மாவை ஏன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை?’ என்று சில முன்னாள் வீரர்கள், இந்நாள் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்புவதை பார்க்கும் போது நமக்கு ஆதங்கமாக உள்ளது.

ரோஹித் ஷர்மா இப்போது நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார், மாற்றுக் கருத்து இல்லை… ஆனால், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடக்கப் போவது இந்தியாவில். இந்தியாவுக்கு அந்த அணியால் பெரிய அளவுக்கு அச்சுறுத்தலும் கிடையாது. அப்படியிருக்க ரோஹித் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் சதம் அடிக்கப் போவது உறுதி.

அந்த சதத்தின் உதவியால் அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், அங்கு ஆஸ்திரேலிய பிட்ச்களில், ஆஸ்திரேலிய பவுலர்களை டெஸ்ட் போட்டிகளில் அவர் எப்படி எதிர்கொள்வார் என்று நமக்கு நன்றாக தெரியும். அவரை ஓப்பனிங் இறக்கி சொதப்பி… இந்தியா தோற்று… வெளிநாடுகளில் ஏன் இந்தியா சிறப்பாக விளையாட மாட்டேங்குது?-னு விவாதம் நடத்தி…. இதெல்லாம் தேவையா?

கருண் நாயருக்கு குரல் கொடுக்கிறோமோ… அதில் நியாயம் உள்ளது. ரோஹித் ஷர்மாவை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுப்பதை என்னவென்று சொல்வது!?.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close