worldcup 1983 | kapil-dev: இந்திய மண்ணில் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக அரங்கேறி வரும் நிலையில், தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தி பிரமிக்க வைத்து வருகிறார்கள். இந்திய அணி வீரர்களும் மிரட்டலான சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
பொதுவாக, இந்திய வீரர்கள் சாதனைகளை நிகழ்த்தும் போதெல்லாம் அவர்களின் முன்னோடிகளின் சாதனைகளை குறிப்பிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில், இந்தியாவுக்கு முதல்முறையாக 1983ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரரான கபில் தேவ் சாதனைகள் அவ்வவ்போது மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. அவரது முக்கிய சாதனைகள் பலவும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, தற்போது இணைய தள பக்கங்களில் நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால், 1983 உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் குவித்து அசத்தல் சாதனை படைத்த இன்னிங்ஸின் வீடியோ மட்டும் இல்லை என்றும், அதற்கான உண்மையான காரணம் தான் என்ன என்றும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில், அப்போது என்ன நடந்து, ஏன் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் மோதிய அந்த முக்கிய போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோ மட்டும் இணைய தளத்தில் கிடைக்கவில்லை என்பதற்கான விடையை இந்த பதிவில் அறிய முயன்றுள்ளோம்.
சாதனை நாயகன் கபில் தேவ்
1983 உலகக் கோப்பையில் முக்கிய போட்டியாக ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் மோதிய ஆட்டம் பார்க்கப்படுகிறது. ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் டன்பிரிட்ஜ் வெல்சில் உள்ள நெவில் கிரவுண்ட் ஸ்டேடியத்தில் நடந்த 20வது லீக் போட்டியில் டங்கன் பிளெட்சர் தலைமையிலான ஜிம்பாப்வே - கபில் தேவ் தலைமையிலான இந்தியா அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கிறிஸ் ஸ்ரீகாந்த் டக்-அவுட் ஆகி வெளியறே அடுத்து களமாடிய மொஹிந்தர் அமர்நாத் (5 ரன்), சந்தீப் பாட்டீல் (1 ரன்), யஷ்பால் சர்மா (9 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு வெளியேறி இருந்தனர். இதனால், இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
/indian-express-tamil/media/post_attachments/12403d76-090.jpg)
இப்படியான இக்கட்டான சூழலில் களம் புகுந்த கேப்டன் கபில் தேவ், 'இனி இழக்க ஒண்ணுமில்லை' என்கிற வரிகளோடு சிக்கி பந்துகளை எல்லாம் சிதறிடித்தார். 138 பந்துகளை எதிர்கொண்ட அவர் 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட மிரட்டி எடுத்தார். ஏற்கனவே சதம் அடித்து வாயை பிளக்க வைத்திருந்த அவர் கூடுதலாக 75 ரன்கள் என மொத்தமாக 175 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவருடன் ஜோடியில் இணைந்த ரோஜர் பின்னி (22 ரன்கள்), மதன் லால் (17 ரன்கள்), சையத் கிர்மானி (24 ரன்கள்) ஆகியோரும் சிறப்பாக உதவினர். இறுதியில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை குவித்து இருந்தது. 267 என்கிற வெற்றி இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 57 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் கபில் தேவ் அறிவிக்கப்பட்டார்.
ஹைலைட்ஸ் வீடியோ இல்லை
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான கபில்தேவின் சிறப்பான பேட்டிங் ஹைலைட்ஸ் வீடியோ ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணத்தை பார்க்கலாம். அதற்குப் பின்னால் நிறைய வதந்திகள் வலம் வருகிறது. சிலர் போட்டி நாளன்று போட்டியை ஒளிபரப்பு செய்யும் பிராட்காஸ்டர் வேலைநிறுத்தத்தில் இருந்தாக கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. அதற்கு முக்கியக் காரணம் போட்டியை ஒளிபரப்பு செய்ய உதவும் உபகரணங்கள் போதிய அளவில் இல்லாததுதான்.
/indian-express-tamil/media/post_attachments/eb3ce841-d19.jpg)
அன்றைய நாளில் மொத்தம் 4 போட்டிகள் நடைபெற்றன. அதனால் தேவையான உபகரணங்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பி.பி.சி இரண்டு போட்டியை மட்டும் ஒளிபரப்பியது. அதன்படி, அப்போது முக்கிய போட்டிகளாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து - பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா போட்டிகளை மட்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் சமரசம் செய்ய முடியாது என்பதாலும், அதேசமயம், தொடரை நடத்தும் நாடாக இருந்த இங்கிலாந்து போட்டியை ஒளிபரப்பு செய்துள்ளனர்.
இருப்பினும், ரன்வீர் சிங் கபில்தேவ் பாத்திரத்தில் நடித்த ’83’ திரைப்படத்தில் ரசிகர்கள் அந்தப் போட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரிஜினல் வீரர்கள் அனைவரும் நடிகர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். படத்தில் படமாக்கப்பட்ட போட்டியில் நேர்மையைக் காண முடிந்தது. போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோ எதுவும் இல்லாததில் தனக்கு எந்த வருத்தம் இல்லை என்று கபில் தேவ் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“