இந்திய டெஸ்ட் அணியில் ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி! இது யாருக்கான எச்சரிக்கை?

விராட் கோலியைத் தவிர, இந்திய டெஸ்ட் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்கள் தலைக்கு நேராகவும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை!.

ANBARASAN GNANAMANI

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான், தற்போதைக்கு கிரிக்கெட் உலகின் ‘ஹாட்’ டாக். மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலியின் Notable சதம் (149) மற்றும் இந்திய பவுலர்களின் சிறப்பான செயல்பாட்டால், தோற்றாலும் இங்கிலாந்துக்கு செம டஃப் கொடுத்தது இந்திய அணி.

இரண்டாவது டெஸ்ட் மேட்ச் நடந்த லார்ட்ஸ் கதை நம் அனைவருக்கும் தெரியும். இந்திய கிரிக்கெட் மறக்க வேண்டிய ஒரு தோல்வி அது. வானிலை + சூழ்நிலை + துரதிர்ஷ்டம் + சரண்டர் என்ற இந்த நான்கு தன்மையும் கூட்டு சேர்ந்து இந்திய அணியை வீழ்த்தியது.

ஆனால், டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் மேட்சில், இந்தியா அட்டகாசமாக மீண்டு வந்து,  இங்கிலாந்தை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்… குறிப்பாக, ‘கேரள வெள்ளத்தால் தங்கள் வீடு, உடமை, சேமிப்பு என அனைத்தையும் இழந்து நிற்பவர்களுக்கு, எங்களால் ஆன சிறு உதவி இது’வென்று, வெற்றியை கேரள மக்களுக்கு கேப்டன் கோலி சமர்ப்பிக்க, சமூக தளங்களில் ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

இந்த நேரத்தில் தான், பிசிசிஐ ஒரு அறிக்கை வெளியிடுகிறது. அதில், மீதமிருக்கும் 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, 19 வயதே ஆன ப்ரித்வி ஷா மற்றும் 24  வயதான ஹனுமா விஹாரி ஆகிய இரு புதுமுகங்களை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்கம் யங் பாய்ஸ்…

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் சேர்த்து வெறும் 26 ரன்களே விஜய் அடித்தார். அதிலும், 2வது மேட்சில் இரு இன்னிங்ஸிலும் விஜய் பூஜ்யம். அதனால், விஜய்க்கு பதிலாக ப்ரித்வி ஷா கொண்டுவரப்பட்டார்.

அதேபோல், ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ‘அவருக்கு பதில்’ மற்றொரு பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

குல்தீப் யாதவுக்கு பதில் என்றால், மற்றொரு ஸ்பின்னரை தானே சேர்க்க வேண்டும்? ஏன் ஒரு பேட்ஸ்மேன் களமிறக்கப்பட்டுள்ளார்? இங்கு தான், மறைமுகமாக பிசிசிஐ தனது எச்சரிக்கையை கரண்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.

ப்ரித்வி ஷா:

ப்ரித்வி ஷா, ஒப்பனிங் பேட்ஸ்மேன். ராகுல் டிராவிட்டின் கண்டுபிடிப்பான ப்ரித்வி, இதுவரை 14 முதல் தர போட்டியில் 26 இன்னிங்ஸில் விளையாடி, 1418 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகபட்சம் – 188

ஆவரேஜ் – 56.72

ஸ்டிரைக் ரேட் – 76.69

சதம் – 7

அரை சதம் – 5

கடந்த ஜூன் – ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் தொடரில், 8 போட்டிகளில் ஆடிய ப்ரித்வி ஷா 603 ரன்கள் விளாசியுள்ளார். இதில், 3 சதங்களும், 2 அரை சதங்களும் அடங்கும்.

இதைத் தொடர்ந்து, பெங்களூரில் நடந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் சதம்(136) விளாசினார்.

ஒட்டுமொத்தமாக கடந்த 10  முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 759 ரன்கள் குவித்திருக்கிறார் ப்ரித்வி ஷா.

முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே ப்ரித்வி தேர்வு செய்யப்பட்டிருப்பது தெளிவாக இந்த Stats மூலம் நமக்கு தெரிகிறது. ஆனால், இங்கு மேட்டரே ப்ரித்விக்கு வெறும் 19 வயது என்பதே தான். என்னதான், ஒரு இளம் வீரர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தாலும், இவ்வளவு இள வயதில், அதுவும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

ஆனால், இவர் சிறப்பாக விளையாடுகிறார் என்பதற்காக மட்டும் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி, நல்ல டெஸ்ட் பார்ட்னர்ஷிப் இன்றி தவித்து வருவதையும், வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கியும் ரில்சட் இல்லை என்பதையும் ப்ரித்வி Inclusion மூலம், விஜய், தவான், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பிசிசிஐ. குறிப்பாக, விஜய் மற்றும் ஷிகர் தவானுக்கு, ‘நீங்கள் கட்டாயம் சிறப்பாக விளையாடியேத் தீர வேண்டும்’ என்றே இந்திய அணி நிர்வாகம் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறது.

விஜய் இப்போது அணியில் இல்லை.. அப்படியெனில், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒப்பனர்கள் தவான் – ராகுலாக தான் இருக்க முடியும். ஆனால், இப்போது ப்ரித்வியின் என்ட்ரி-க்குப் பிறகு, அது கேள்விக்குறியாகியுள்ளது.

 யாருடைய இடம் ப்ரித்வி ஷாவுக்கு?

லோகேஷ் ராகுலை பொறுத்தவரை, 2016 – 2018 வரை உள்ளூர், வெளியூர் என மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

2016 – 7 போட்டிகளில் 539 ரன்கள், ஆவரேஜ் – 59.88

2017 – 9 போட்டிகளில் 633 ரன்கள், ஆவரேஜ் – 48.69

2018 – 6 போட்டிகளில் 178 ரன்கள், ஆவரேஜ் – 16.18

இந்தாண்டு அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது லோகேஷ் ராகுல் ஃபார்ம். நடப்பு இங்கிலாந்து தொடரில், 3 போட்டிகளில் 94 ரன்களே எடுத்துள்ளார்.

இருப்பினும், 26 வயது யங் பேட்ஸ்மேன் + இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் அனுபவம் உள்ளிட்ட காரணிகள் தொடர்ந்து ராகுலை காப்பாற்றி, டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால், ஷகர் தவானுக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

32 வயது என்பது அவருக்கு பெரிய மைனஸ் இல்லை. ஆனால், ராகுலைப் போல, இந்தாண்டு டெஸ்ட் தொடரில், அவரது தடுமாற்றம், ப்ரித்விக்கு எதிர்காலத்தை உருவாக்க காரணமாக அமைய நிறைய வாய்ப்புள்ளது.

2016 – 2018 காலக்கட்டத்தில், மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஷிகர் தவான், 963 ரன்கள் எடுத்துள்ளார். இந்த 13 போட்டிகளில் 9 போட்டிகள் வெளிநாட்டில் ஆடப்பட்டது. அந்த 9 போட்டியில் அவர் அடித்த ரன்கள் 646. ஆனால், இந்த 646 ரன்களில் இலங்கைக்கு எதிரான தொடரில் (3 போட்டிகள்) மட்டும் அவர் அடித்த ரன்கள் 358. ஆவரேஜ் 89.50.

வெளிநாட்டில் மீதம் விளையாடிய 6 போட்டியிலும் அவர் அடித்த ரன்கள் 288. ஆவரேஜ் 29.50.

இவர் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிட்சில் தான், தொடக்க வீரர் ப்ரித்வி ஷா, 3 சதங்களுடன் 603 ரன்கள் குவித்திருக்கிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ப்ரித்வி ஷாவின் வருகை ஷிகர் தவானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதே உண்மை.

அதேபோல், ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டிருப்பதும், இந்தியன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையே!.

யார் இந்த ஹனுமா விஹாரி?

ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி தான், முதல் தர கிரிக்கெட்டில், உலகிலேயே அதிகம் ஆவரேஜ் வைத்திருக்கும் வீரர். 59.45.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். ஆவரேஜ் 57.27.

எப்படி? இன்ட்ரோ-வே அதிருதுல…

இதுவரை 63 முதல் தர போட்டியில், 97 இன்னிங்ஸில் விளையாடி, 5142 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகபட்சம் – 302*

ஆவரேஜ் – 59.79

ஸ்டிரைக் ரேட் – 48.75

சதம் – 15

அரை சதம் – 24

நடப்பு இங்கிலாந்து தொடரில், முதல் டெஸ்ட் போட்டியிலேயே மோசமான ஃபார்ம் காரணமாக புஜாரா சேர்க்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டாலும், அவரால் அடிக்க முடியவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தான், 2வது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்தார்.

2016 – 11 போட்டியில் 836 ரன்கள், ஆவரேஜ் 55.73

2017 – 11 போட்டியில் 1140 ரன்கள், ஆவரேஜ் 67.05

2018 – 6  போட்டியில் 239 ரன்கள், ஆவரேஜ் 21.72

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனது முதல், அதாவது 2010 – 2018 வரை, 26 போட்டிகள் வெளிநாடுகளில் ஆடியுள்ளார் புஜாரா. இதில் அவர் அடித்த ரன்கள் 1514. ஆவரேஜ் 34.40.

குறிப்பாக,

2016 – 3 போட்டியில் 62 ரன்கள், ஆவரேஜ் 31.00

2017 – 3 போட்டியில் 309 ரன்கள், ஆவரேஜ் 77.25

2018 – 5  போட்டியில் 204 ரன்கள், ஆவரேஜ் 20.40

இதில், தவானை போல புஜாராவும் 2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் தான் அதிக ரன்கள் குவித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நடப்பு இங்கிலாந்து என எதிலும் அவர் ஜொலிக்கவில்லை.

இப்படியொரு, மோசமான ஃபார்மில் இருக்கும் புஜாரா, கடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அரை சதம் அடித்திருப்பது மட்டுமே அவருக்கு ஆறுதல்! மற்றபடி, மிரட்டலான ஃபார்மில் இருக்கும் விஹாரி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது, புஜாராவுக்கு மட்டுமல்ல… டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தடுமாறும் ரஹானேவுக்கும் எச்சரிக்கை மணியே!.

ஒட்டுமொத்தமாக, விராட் கோலியைத் தவிர, இந்திய டெஸ்ட் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்கள் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close