இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ் போட்ட பிறகு, இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.
இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் - தவான் இடம் பெற்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரஹானே இடம் பெற்றனர்.
லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்தனர். ஒரேயொரு ஸ்பின்னராக அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். ஆனால், முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது ரசிகர்களையும், கிரிக்கெட் விமர்சகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.
புஜாரா நீக்கப்பட்டது சரியான முடிவு தானா.....?
என்று கேட்டால், ஆம்! என்று புஜாராவே சொல்ல வைக்கிறார். ஏனெனில், 2018ல் புஜாரா 4 டெஸ்ட் போட்டியில், 7 இன்னிங்ஸில் ஆடியுள்ளார். ஆனால், அவர் அடித்த ரன்கள் 135. ஆவரேஜ் 19.29. அதேபோல், இங்கிலாந்து கவுண்டி கிளப் போட்டியில் யார்க்ஷைர் அணிக்காக எட்டு போட்டிகளில் ஆடிய புஜாராவின் ஆவரேஜ் 14.33 மட்டுமே.
மேலும், முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சிப் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் சேர்த்து புஜாரா அடித்த ரன்கள் 24. இதனால் தான், பயிற்சிப் போட்டியில் அரைசதம் எடுத்த லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
என்னதான் இருந்தாலும், ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர்களில் புஜாரா இல்லாமல் களமிறங்குவது சற்று நெருடலாகவே உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் லைவ் கிரிக்கெட் காண இங்கே க்ளிக் செய்யவும்