Suryakumar Yadav Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் வீராதி வீரராகவும், சூராதி சூரனாகவும் உருவெடுத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடர், அதைத் தொடர்ந்து நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என சமீபத்திய டி20 தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முத்திரையை பதித்துள்ளார் சூர்யா. மேலும் 890 புள்ளிகளுடன் ஐசிசி டி20 சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அவர் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
தவிர, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து, 42 டி20 போட்டிகளில் 1400 ரன்களுக்கு மேல் அடித்து மிரட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் 59.75 என்ற வலுவான சராசரியில் 239 ரன்கள் குவித்தும் அசத்தினார்.

ஆனால், ஒருநாள் தொடர்களில் களமாடும் சூரியகுமாருக்கு தொடர் சரிவுகள் தான் எஞ்சியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 4, 34, 6 என மொத்தமாக 44 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் இந்தியாவின் தொடக்க ஜோடிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், சூரியாவுக்கு அதை செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரின் ஆட்டம் திட்டமிட்டபடி செல்லவில்லை.
டி-20 போட்டிகளில் அவர் மட்டையைச் சுழற்றுவது போல், ஒருநாள் போட்டியிலும் சுழற்றலாம். ஆனால், அதற்கான நேரமும் காலமும் சரியாக கைகொடுக்க வேண்டும். குறிப்பாக, அவரின் ஷாட் தேர்வுகள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அதுவும் நியூசிலாந்து மண்ணில் அவர் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றே கூறலாம். எனினும், சர்வதேச ஒருநாள் தொடரில் ஓர் ஆண்டு மட்டுமே அனுபவம் கொண்ட அவர் எளிதில் அதன் சூத்திரங்களை கண்டுபிடிப்பார் என்று நம்பலாம்.
சராசரி மிகவும் குறைவு
கடந்தாண்டு ஜூலை 18 அன்று இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்காக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் (32), அதன்பின்னர் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 100 ஸ்டிரைக் ரேட்டில் 340 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரைசதங்களை விளாசியுள்ள அவரின் அதிகபட்ச ரன் 64. ஒருநாள் போட்டிகளில் அவரின் சராசரி 32.0 என்று உள்ளது.
இப்படியாக குறைந்த சராசரியில் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் சூரியகுமார், அதை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதேபோல், அவர் களமாடும் போது அணியின் ஸ்கோர் என்ன என்பதையும், ஸ்கோர் போர்டில் ரன்களை உயர்த்தும் பாணியையும் கற்க வேண்டும். அவருக்கான உதாரணம் அவரின் கண்முன்னே இருக்கிறது. இந்தியாவுக்காக களத்தில் 3வது வீரராக மட்டையைச் சுழற்றும் விராட் கோலி தான் அது.

ஒருநாள் போட்டிகளில் அவரின் நேர்த்தியான ஆட்டம், நிலையான ஆட்டம், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது, அப்போதும் தனது ஸ்டைலிஷ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன. அதை சூரியா தனது ஆட்ட நுணுக்கங்களில் சேர்த்துக் கொண்டால் அவர் ஒருநாள் போட்டியிலும் சூராதி சூரராகவும், வீராதி வீரராகவும் வலம் வரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil