வரும் ஜூன் 1-ஆம் தேதி இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராஃபி (மினி உலகக்கோப்பை) தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த திங்களன்று மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், திட்டமிட்டப்படி இத்தொடர் நடக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதுகுறித்து ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆகியவை மறுபரிசீலனை செய்து வருகின்றன. மேலும், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், போட்டி நடக்கும் இடங்களில் உள்ள பாதுகாப்பு தன்மை குறித்து ஆராய, முன்னாள் டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமாரை, வீரர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன், பிசிசிஐ அனுப்புகிறது.
மேலும், ஐசிசி தெரிவிக்கையில், "ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் பெண்கள் உலகக் கோப்பை தொடருக்கான பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் தொடர் போட்டிகள் மான்செஸ்டரில் நடக்கவில்லை. லண்டன், பிர்மிங்கம் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் மட்டுமே நடக்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மற்றும் அதுசார்ந்த பாதுகாப்பு துறைகளிடம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உறுதி செய்ய எங்களது போட்டி பாதுகாப்பு இயக்குநரகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்" என கூறியுள்ளது.