இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் என்ற பெயர்கள் ஒலிக்கும் தருணத்தை இனி கேட்கமுடியுமா என்பது தெரியவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் செயல்பாடுகள், 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை முன்னோக்கி உள்ளன. பொதுவாக, இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி டிராஃபி தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
அதன்பின், இந்தாண்டும் (2017) இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. இத்தொடரில் லீக் சுற்றில் இலங்கையிடம் மட்டும் இந்திய அணி தோற்றிருந்தது. அதற்குப்பின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
கிரிக்கெட்டில் உலகின் தலை சிறந்த அணி எதுவாக இருப்பினும், விளையாடும் அந்த ஒரு குறிப்பிட்ட நாள் எந்த அணிக்கு சாதகமாக இருக்கிறதோ, அதைப் பொறுத்துதான் வெற்றியும் அமைகிறது. அந்த வகையில், அன்றைய தினம் இந்தியாவை பாகிஸ்தான் எளிதாக வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியில் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், 2019 உலகக்கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று உள்ளது பிசிசிஐ.
அதன்பின், இலங்கை அணியை இலங்கை மண்ணிலேயே வைத்து கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் நடந்த 9 போட்டிகளில் கிளீன் ஸ்வீப் செய்து வரலாறு படைத்தது. இலங்கைக்கு எதிரான அத்தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவித்தது பிசிசிஐ. அதுமட்டுமில்லாமல் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளிலும் ஜடேஜா, அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக கேதர் ஜாதவ், அக்ஷர் படேல் ஆகியோரை களமிறக்கியது பிசிசிஐ. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பாண்ட்யாவும் அணியில் இடம் பிடித்தார்.
ஆக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜடேஜா, அஷ்வினை உட்கார வைத்தது பிசிசிஐ. அதேசமயம், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பாண்ட்யா, கேதர் ஜாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
வேகப்பந்துவீச்சு, அதிரடி பேட்டிங் என ஹர்திக் பாண்ட்யா கலக்கினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சேர ஃபாஸ்ட் பவுலிங், அதிரடி பேட்டிங் திறமை கொண்ட ஒரே வீரர் கபில் தேவ் தான். ஆனால், அதன்பிறகு மீண்டும் அப்படியொரு தலைசிறந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பதாக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி, அணியில் தன்னுடைய அஸ்திவாரத்தை மிகவும் ஸ்டிராங்காக போட்டுக் கொண்டிருக்கிறார் ஹர்திக்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, தோனி களமிறங்கி வந்த நான்காவது இடத்தையே தற்போது ஹர்திக் ஆக்கிரமித்துக் கொண்டார். காரணம், 2019 உலகக்கோப்பைகாக அணியை கட்டமைக்கும் முயற்சியாக பிசிசிஐ இதனை செய்து வருகிறது.
இதே போன்று கேதர் ஜாதவும், தனது இடத்தை நிலையாக்கிக் கொண்டிருக்கிறார். அணி எந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், வாகாக வரும் பந்துகளை அடித்து துவம்சம் செய்யும் பணியை மிகவும் சிறப்பாக செய்துவருகிறார் கேதர். அதேபோல், இவரது மற்றொரு பலம் இவரது ஸ்பின் பவுலிங். வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான கேதர், அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்துவிடுகிறார். தன்னுடைய பவுலிங் ஸ்டைலையும் அடிக்கடி மாற்றி, எதிரணி பேட்ஸ்மேன்களின் வியூகங்களை தகர்த்து விடுகிறார். இந்தியா - ஆஸ்திரலியா இடையே நடந்த இறுதி ஒருநாள் போட்டியின் போது, ஆஸி., கேப்டன் ஸ்மித்தை எல்பிடபில்யூ செய்து அவுட்டாக்கியதே இதற்கு உதாரணம்.
அதேபோல், அக்ஷர் படேலும் தனது ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் மூலம் அணி நிர்வாகத்தின் பார்வையை எப்போதும் தன் மீதிருக்கும்படி செய்து விடுகிறார்.
இதனால் இகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது ரவீந்திர ஜடேஜா தான். ஒருநாள் போட்டிகளில் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய மூன்றில், பவுலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் தான் ஜடேஜா ஜொலித்தது அதிகம். இக்கட்டான நேரங்களில் காட்டுத் தனமாக சிக்ஸர்களை விளாசுவதில் ஜடேஜாவை விட பாண்ட்யா மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அதேசமயம், கேதர் ஸ்பின் பவுலிங்கில் கை கொடுப்பதால், இந்திய ஒருநாள் அணியில் ஜடேஜாவின் இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதை உறுதி செய்வது போல், நடந்து முடிந்த ஆஸி., அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்படாதது போல், நேற்று அறிவிக்கப்பட்ட டி20 அணியிலும் ஜடேஜா பெயர் இடம் பெறவில்லை.
ஜடேஜாவின் இடத்தை பாண்ட்யா, கேதர், அக்ஷர் ஆகியோர் நிரப்பி விடுவதால் இந்திய அணிக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை. இதனால், இனி ஜடேஜா குறுகிய ஓவர்கள் கொண்ட ஆட்டங்களில் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகமே. அதேசமயம் டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் அவர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
தற்போது குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் என இளம் ஸ்பின் படையை இறக்கியுள்ளது பிசிசிஐ. இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அஷ்வினும் அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும், உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் மூத்த வீரர் என்ற முறையில் அஷ்வினின் பங்களிப்பு நிச்சயம் அணிக்கு தேவை. இதனால், அஷ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. தோனியும் இப்போது டைம்லைனில் இல்லை. அவரது சகாக்களான ஜடேஜாவும், அஷ்வினும் இப்போது அணியில் இல்லை. கோலி வார்த்தைகளே இங்கு வேத வாக்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.