இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மே மாத இறுதியில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்து ஜூன் மாதத்தில் இருந்து டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட், அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள நட்ராஜன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெறாததது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜனை தொடர்புகொண்டோம்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த ருத்துராஜ், அதிக விக்கெட் வீழ்த்திய நட்ராஜன் ஆகிய இருவரும் உலககோப்பை இந்திய அணியில் இடம்பெறறாதது குறித்து உங்கள் கருத்து
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவருமே லெஜண்ட்ஸ். ஒரு பெரிய தொடரில் இந்திய அணி விளையாடும்போது நிச்சயமாக அனுபவம் தேவை. அதேபோல் பும்ரா மேட்ச் வின்னர். அணியில் 15 பேர் தான் எடுக்க முடியும் என்பதால் நன்றாக விளையாடி திறமையை நிரூபித்து வரும் ரின்கு சிங் போன்ற பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று அஜித் அகார்கரே வருத்தம் தெரிவித்திருந்தார்.
ருத்துராஜ், நடராஜன், ரின்கு சிங் போன்ற இளம் வீரர்கள் வருங்கால இந்திய அணியின் தூண்கள். அவர்கள் இதற்கு முன்பே இந்திய அணியில் விளையாடி இருக்கிறார்கள். வருங்காலங்களில் இவர்கள் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உருவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இருக்கும் ரோகித் சர்மா விராட் கோலி போல் இவர்களும் இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இடம்பெறுவார்கள்.
ஒருநாள் போட்டிகளில், 280-290 ரன்கள் எடுத்தாலே சேசிங் செய்யும் அணிக்கு சற்று சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது டி20 போட்டிகளில் 270 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இதன் மூலம் பந்துவீச்சாளர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது என்று சொல்லலாமா?
அப்படி சொல்லிவிட முடியாது. முன்பெல்லாம் ஒரு பந்தை சந்திக்கும்போது பேட்ஸ்மேன்கள் ஒரு ஷாட் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு பந்து வீசினால் அதை 4 வகையாக ஷாட்களில் விளையாடுகின்றனர். பேட்ஸ்மேன்கள் தங்களை பந்துவீச்சுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கிறார்கள். அதேபோல் பந்துவீச்சாளர்களும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பும்ரா பந்துவீச்சை யாரும் அடிப்பதில்லை. அதேபோல் டி20 போட்டிகளில் மெய்டன் ஓவர் வீசியவர் நடராஜன். அவரது பந்துவீச்சிலும் யாரும் அடிக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர் சாஹால் விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர் அவரின் பந்துவீச்சையும் யாருக்கு அடிக்க முடிவில்லை. இதில் பும்ரா சாஹல் இருவருமே டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆண்கள் கிரிக்கெட்க்கு ஐபிஎல் தொடர் பிரபலமாக உள்ளது போல் பெண்கள் ஐபிஎல் தொடர் பிரபலமாகவில்லையே?
பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் பெரிய பிரபலமாக உள்ளது. இதுவரை 2 சீசன்கள் தான் நடந்துள்ளது. முதல் சீசன் அவ்வளவு ரீச் இல்லை என்றாலும், 2-வது சீசன் பெரிய ரீச் கிடைத்தது, பெண்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி திறமையை நிரூபித்த சில தமிழக வீராங்கனைகள் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அதிகமாக இளம் வீராங்கனைகளின் திறமையை வெளிக்கொண்டுவர இந்த பெண்கள் ஐபிஎல் தொடர் பெரும் உதவியாக இருக்கிறது.
பெண்கள் ஐபிஎல் தொடரில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆனது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் ஆண்கள் அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஆண்கள் அணி இதுவரை சாம்பியன் பட்டம் கைப்பற்றவில்லை என்பதால் புதிய சாதனையாக அமைந்தது. வரும்காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், இளம் வீராங்கனைகளை அடையாளம் காணவும் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் சிறந்த தொடராக இருக்கும்.
உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் பலம் பலவீனம் என்ன?
உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி பலமாகவே உள்ளது. லெஜண்ட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் தான் இந்திய அணியின் பெரிய பலம். இந்திய அணியில் பலவீனம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. முகமது சிராஜ்யை அணியில் எடுத்தது குறித்து விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அவர் ஒரு மேட்ச் வின்னிங் பந்துவீச்சாளர். நிச்சயமாக அவர் தனது திறமையைின் மூலம் வெற்றியை தேடி கொடுப்பவர்.
அதேபோல் ஷிவம் டூபே நின்ன இடத்தில் இருந்து சிக்சர் அடித்து கலக்கி வருகிறார். யுஸ்வேந்திர சஹால், விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர் டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். தற்போது உள்ள இந்திய அணி மிகவும் பலம் வாய்தது என்று சொல்லலாமே தவிர, பலவீனம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று நிரஞ்சனா நாகராஜன் கூறியுள்ளார்.
நிரஞ்சனா நாகராஜன் புள்ளி விபரங்கள்
1988-ம் ஆண்டு சென்னையில் பிறந்த நிரஞ்சனா நாகராஜன் 2008-ம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் அறிமுகமானார். இந்திய அணிக்காக 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 70 ரன்களும் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 14 20 போட்டிகளிலும் 2 டெஸட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளும், 42 ரன்களும் எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.