மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.
இதனையடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையிலும், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. . அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.
இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, நாளை நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளது. முதல் போட்டி முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், பெண்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல், அணியில் இடம்பெற்றுள்ள பிற நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.