11–வது பெண்கள் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் ஜூலை 23–ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவும், போட்டியை நடத்தும் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், அரைஇறுதிக்குத் தகுதி பெறும். ஜூலை 18, 20–ஆம் தேதிகளில் அரைஇறுதி ஆட்டமும், ஜூலை 23–ஆம் தேதி லண்டனில் இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை மித்தாலி ராஜ் தான் கேப்டன். 34 வயதான மிதாலி ராஜ் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த அனுபவம் வாய்ந்தவர். ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளரான ஜூலன் கோஸ்வாமி, அண்மையில் அயர்லாந்துக்கு எதிராக முதலாவது விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து வரலாறு படைத்த தீப்தி சர்மா, பூனம் ரவுத் ஜோடி, ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷிகா பான்டே, உள்ளிட்டோர் அணிக்கு வலுச் சேர்க்கிறார்கள். ஆனால் ஹீதர் நைட் தலைமையில் இங்கிலாந்தும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த அணி ஏற்கனவே 3 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.