இங்கிலாந்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.
இதனையடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையிலும், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளதால் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மேலும், கடந்த 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. அந்த போட்டி நடைபெற்ற அதே லார்ட்ஸ் மைதானத்தில் தான் தற்போதைய போட்டியும் நடைபெறவுள்ளது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளதாலும், அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கவுள்ளனர். அதோபோல், குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும், ஏற்கனவே மூன்று முறை வென்ற கோப்பையை மீண்டும் தட்டிச் செல்லும் வெறியுடனும் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க வீராங்கனைகள் சிறப்பான தொடக்கம் தருவது முக்கியம். ஆனால், குரூப் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்மிரிதி மந்தனா, அடுத்து வந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் மீண்டும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரை பொறுத்தவரை, கேப்டன் மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். பந்துவீச்சில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
இங்கிலாந்தை பொறுத்தவரை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. சொந்த மண்ணில் களமிறங்குவது கூடுதல் பலம். குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றதற்கு பின்னர், அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 10 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 6 போட்டிகளிலும், இந்தியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுதியுள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை மூன்று மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணி கோப்பையை வென்று மகுடம் சூடுமா என ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.