Advertisment

ஆசியாவின் பழமையான கால்பந்து... இந்தியாவின் துராண்ட் கோப்பை கால்பந்து வரலாறு தெரியுமா?

இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் அதிகாரப்பூர்வ தேசிய கால்பந்து அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் 18-ம் நூற்றாண்டுகளின் இறுதியில் இந்தியா கால்பந்து விளையாட தொடங்கியது.

author-image
D. Elayaraja
New Update
oldest Football in India

உலகின் பழமையான கால்பந்து போட்டி துராண்ட் கோப்பை 2023 சாம்பியன் மோஹன் பஹான் - கொல்கத்தா

உலகளவில் விளையாட்டு போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இளைஞர்களும், அந்த விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிக்க மக்களும் அதிகம் விருப்புகின்றனர். சினிமாவை போல் விளையாட்டு போட்டிகளும் மக்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. அதே சமயம் சில குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisment

இந்த போட்டிகள் நடைபெறும்போது ஸ்டேடியத்தில் நிரம்பி வழிவதை போல் டிவி முன்பு விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிக்க ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடும். அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், உலகளவில் கால்பந்து போட்டிக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். தேசிய அளவில் கிரிக்கெட் அணி இல்லாத நாடுகளில் கூட கால்பந்து அணி உலகளவில் பிரபலமான அணியாக உள்ளது என்பது பலரும் அறிந்த ஒரு உண்மை.

உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்போது உலகளவில் பல ரசிகர்கள் நேரடியாகவும், டிவியிலும் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் கால்பந்து போட்டியை கண்டு ரசிக்கவே நாடு வி்ட்டு நாடு செல்லும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம் உள்ளனர். இந்தியாவிலும் அப்படி கால்பந்து போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்தியாவின் கால்பந்து வரலாறு

இந்திய தேசிய கால்பந்து அணி கடந்த 1920-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா மற்றும் பிரிட்டீஷ் வீரர்கள் அடங்கிய இந்தியாவின் முழுமையான கால்பந்து அணி கோஸ்தா பால் என்பவரின் தலைமையில் 1924-ம் ஆண்டு விளையாட தொடங்கியது. 6 வருடங்கள் கழித்து 1930-ம் ஆண்டு முழுக்க முழுக்க இந்திய வீரர்கள் அடங்கிய இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

Durand Cup Football

1933-ம் ஆண்டு கோஸ்தா பால் தலைமையிலான இந்திய சிலோன் (இலங்கை) அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவே இந்தியா வெளிநாட்டில் பெற்ற முதல் வெற்றியாகும். அதன்பிறகு 1936-ம் ஆண்டு கொல்கத்தாவில் சீனா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அதன்பிறகு இந்திய அணி வெளிநாட்டு க்ளப் அணிகளுக்கு எதிராக வெற்றிகளை குவித்ததை தொடர்ந்து 1937-ம் ஆண்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய அணி பல சர்வதேச போட்டிகளில் விளையாடியது.

இந்தியாவின் முதல் க்ளப் கால்பந்து போட்டி

இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் அதிகாரப்பூர்வ தேசிய கால்பந்து அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் 18-ம் நூற்றாண்டுகளின் இறுதியில் இந்தியாவில் கால்பந்து விளையாட தொடங்கியது. 1888-ம் ஆண்டு முதன் முதலாக துராண்ட் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் தொடங்கப்பட்டது. துராண்ட் கால்பந்து போட்டி சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த க்ளப் கால்பந்து போட்டி தொடர் முதன் முதலில் சிம்லாவில் நடத்தப்பட்டது.

ஆசியாவிலேயே மிகவும் பழமையாக க்ளப் கால்பந்து போட்டியான துராண்ட் கோப்பை போட்டி உலகளவில் 5-வது பழமையாக தேசிய கால்பந்து போட்டியாக உள்ளது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த போட்டித்தொடர் இந்தியா கால்பந்து போட்டி பருவத்தின் தொடக்க போட்டியாக உள்ளது. இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள்.

துராண்ட் கால்பந்து வரலாறு

1884-94 வரை இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருந்த சர் ஹென்ரி மார்ட்மர் துராண்ட் உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு முக்கியம் என்பதை உணர்ந்து இந்தியாவில் விளையாட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில்,இந்த கால்பந்து தொடரை தொடங்கி வைத்தார். இதில் முதலில், இந்தியாவின் ஆயுதப்படை மற்றும் சுதேச மாநிலங்களில் இருக்கும் பல்வேறு துறைகள் மற்றும் படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய அணிகள் பங்கேற்கும் போட்டியாக தொடங்கப்பட்டது.

பிரிட்டீஷ் அணிகளின் ஆதிக்கம்

துராண்ட் கோப்பை தொடங்கப்பட்ட 1988-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டீஷ் அணியான ராயல் ஸ்காட்ஸ் ஃபியூசிலியர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில், ஹைலேண்ட் லைட் காலாட்படை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு 1938-ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் பிரிட்டீஷ் அணிகளே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2-ம் உலகப்போர் காரணமாக கடந்த 1939-ம் ஆண்டு போட்டித்தொடர் நடைபெறவில்லை.

durand Cup

2ம் உலகப்போர் மற்றும் இந்திய பிரிவினை

தொடக்கம் முதலே சிம்லாவில் நடைபெற்று வந்த துராண்ட் கோப்பை கால்பந்து தொடர் 1940-ம் ஆண்டு டெல்லிக்கு மாற்றப்பட்டது. டெல்லிக்கு மாற்றிய முதல் போட்டியில் இந்தியாவின் முகமதியான் அணி பிரிட்டீஷ் அணியான ராயல் வார்விக்ஷயர் ரெஜிமென்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 1941 முதல் 1949-வரை இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய பிரிவினை காரணமாக துராண்ட் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படவில்லை.

இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து 1950-ம் ஆண்டு துராண்ட் கோப்பை கால்பந்து தொடர் மீண்டும் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க இந்தியாவின் உள்ளூர் கால்பந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இதுவரை 70 முறை நடந்துள்ளது. இதில் 1962-ல் இந்தியா சீனா போர் காரணமாகவும், 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாகவும் போட்டிகள் நடத்தப்படவில்லை.

மோஹன் பஹான் அணி ஆதிக்கம்

சுதந்திரத்திற்கு பின் தொடங்கப்பட்ட அத்தனை தொடர்களிலும் பங்கேற்றுள்ள கொல்கத்தாவின் பழமைவாய்ந்த கால்பந்து அணியான மோஹன் பஹான் அணி இதுவரை 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 12 முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் துராண்ட் கோப்பை கால்பந்து தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமை மோஹன் பஹான் அணிக்கு கிடைத்துள்ளது.

Durand Cup Foot Ball

23 அணிகள் பங்கேற்ற 2023-ம் ஆண்டு துராண்ட் கோப்பை தொடரில், லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளின் முடிவில், மோஹன் பஹான் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் மோஹன் பஹான் அணி 1-0 என்ற கணக்கில் ஈஸ்ட்பெங்கால் அணியை வீழ்த்தி 17-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியின் தொடக்கத்தில் மோஹன் பஹான் அணியின் அனிருதா தபா சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆனாலும் 71-வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடோஸ் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தினார். கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மோஹன் பஹான் அணி 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மகுடம் சூடியுள்ளது.

ஈஸ்ட் பெங்கால் அணி 16 முறை சாம்பியன் பட்டம் வென்று 2-வது இடத்திலும், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளது. முதன் முதலாக ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த போட்டி தொடரில் கடந்த 2016-ம் நடந்த தொடரை தவிர மற்ற எந்த தொடரிலும் ராணுவ அணி சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 2016-ம் ஆண்டு ஆர்மி கிரீன் நார்கோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

துராண்ட் கோப்பை தொடரில் ஐஎஸ்எல் அணிகள்

இந்தியாவின் க்ளப் அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த துராண்ட் கோப்பை தொடரில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஐ லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் அணிகளும் துராண்ட் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Football sunscreen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment