அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி! உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்!

10 வருடங்களுக்கு முன்பு வரை கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக வலம் வந்துக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ச்சி இன்று வார்த்தைகளால் அடக்கிவிட முடியாதவை. உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும், எந்த அணியாக இருந்தாலும் வீழ்த்தும் திறன் படைத்த அணியாக உருவெடுத்து இருக்கிறது. கடந்த மூன்று உலகக் கோப்பை…

By: May 20, 2019, 8:55:42 PM

10 வருடங்களுக்கு முன்பு வரை கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக வலம் வந்துக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ச்சி இன்று வார்த்தைகளால் அடக்கிவிட முடியாதவை. உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும், எந்த அணியாக இருந்தாலும் வீழ்த்தும் திறன் படைத்த அணியாக உருவெடுத்து இருக்கிறது.

கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் வங்கதேசம் அடைந்த படிப்படியான வளர்ச்சி குறித்தும், எதிர்வரும் உலகக் கோப்பையில் அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்,

அங்கீகாரம்

வெஸ்ட் இண்டீஸில் நடந்த 2007 உலகக் கோப்பை தான் அவர்களது அடையாளம், அங்கீகாரம் எனலாம். அவர்கள் அந்த அங்கீகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்ட நாடு இந்தியா. லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, உலகின் மற்ற அணிகளை திரும்பிப் பார்க்க வைத்தது வங்கதேசம். அந்த தொடரில் சூப்பர் 8 வரை முன்னேறியது. இந்தியாவையும் வெளியேற்றியது.

அனுபவம்

அடுத்து, ஆசிய கண்டத்தில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையில், அவர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்களே தவிர, அனுபவமின்மையால் பல போட்டிகளை கோட்டை விட்டார்கள். தங்களுக்கு சாதகமான தருணங்களை வெற்றியாக மாற்றத் தெரியாமல் தடுமாறினார்கள். அந்தத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினாலும் படிப்பினைகளை கிலோ கணக்கில் கற்றுச் சென்றனர்.

அபாரம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர்களது ஆட்டம், மற்ற அணிகளை மிரள வைத்தது. முதல் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அசுர பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்திய ரசிகர்களை கதி கலங்க வைத்து தான் தோற்று வெளியேறியது. வங்கதேசத்திடம் இருந்து இப்படியொரு ஆட்டத்தினை, இப்படியொரு கண்டிஷனில் யாருமே எதிர்பார்க்கவில்லை.

அடுத்து?

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் திருவிழாவை நோக்கி எல்லா அணிகளும் காத்திருப்பது போல் இல்லாமல், இம்முறை உலகக் கோப்பை மீது ஒருவித ஆக்ரோஷம் கலந்த பசியோடு காத்திருக்கிறது மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி.

2012 காலக்கட்டத்திற்கு பிறகு, வங்கதேசம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா என்று பலம் வாய்ந்த அணிகளை எல்லாம் பந்தாடி கோப்பைகளை வென்றிருக்கிறது. குறிப்பாக, கடந்த 3-4 ஆண்டுகளில் இந்தியாவுடன் விளையாடிய அனைத்து போட்டிகளிலும், இந்திய ரசிகர்களை குறைந்தது 4 பிபி மாத்திரைகளையாவது போட வைத்திருக்கிறது. அவ்வளவு Close games, Last Ball victory என்று வலிமையான இந்திய அணியை ஓருவழியாக்கி தான் வெற்றியை தவறவிட்டிருக்கிறது.

திறனளவில் அவர்களிடம் இப்போது சகலமும் உள்ளது.

தகவமைப்பு

சூழியலை சாதகமாக்குதல்

தருணங்களை வெற்றியாக்குதல்

என்று அனைத்திலும் தேர்ந்து விட்டார்கள், ஒன்றைத் தவிர.

சிறு பிள்ளைத் தனம்

‘Cricket is a Gentleman Game’ என்ற வாக்கியத்துக்கும், வங்கதேசத்துக்கும் ஆகாய மார்க்கமாக கூட செல்ல முடியாத அளவிற்கு மெச்சூரிட்டி லெவலில் பள்ளிக் குழந்தைகளை விட கீழ் லெவலில் உள்ளனர். நான் சொல்வது ரசிகர்கள் என்று நினைத்துவிடாதீர்கள், வீரர்களைத் தான்.

ரசிகர்கள் இன்னமும் தோனி தலையை ரத்தம் சொட்ட வெட்டி போட்டோஷாப் செய்துக் கொண்டிருந்தால், வீரர்கள் வெற்றிப் பெறுவதற்கு முன்பாகவே ‘நாகினி டான்ஸ்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, Matured எனும் குணத்தை என்று கற்றுக் கொள்கிறார்களோ, அன்று இந்த அணியின் கைகளில் உலகக் கோப்பை மட்டுமல்ல, எவ்வளவோ கோப்பைகள் தவழப் போவது உறுதி!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:World cup 2019 bangladesh cricket team

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X