கிரிக்கெட் உலகில் 1975-ம் ஆண்டு முதல் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த முதல் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற நிலையில், 1979-ம் ஆண்டு நடந்த 2-வது உலககோப்பை தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணியே வென்றது. இதனையடுத்து 3-வது உலககோப்பை தொடர் 1983-ல் இங்கிலாந்தில் நடைபெற்றது கபில்தேவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பல போராட்டங்களுக்கு பிறகு இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
அதன்பிறகு நடந்த உலககோப்பை தொடர்களில் இந்திய அணி லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறிய நிலையில், 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 14 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், அனைத்து அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, இங்கிலாந்து பாகிஸ்தான் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகளை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா
ஏ பிரிவில் முக்கிய அணியாக இருந்த ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்து. லீக் சுற்றில் 6 போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா ஏ பிரிவில் முதலிடத்திலும், 5 வெற்றிகள் பெற்ற இந்திய அணி 2-வது இடத்தையும் பிடித்தது. இரு பிரிவில் இருந்தும் தலா 3 அணிகள் என சூப்பர் சிக்ஸ் அணிக்கு 6 அணிகள் தகுதி பெற்றது. வழக்கம்போல் இதில் 5 போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சூப்பர் சிக்ஸ் சுற்றிலும் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 4 வெற்றிகளுடன் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் என 2 போட்டிகளிலும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியதால், இறுதிப்போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
2003 மார்ச் 23-ந் தேதி தென்ஆப்பிரிக்கவின் ஜகனஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி பனிப்பொழிவு மற்றும் மழையினால் ஏற்பட்ட ஈரப்பதத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போதே கங்குலியின் முடிவு பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் கங்குலியின் முடிவை சரியான பயன்படுத்திக்கொண்ட ஆஸ்திரேலியா இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர்.
விமர்சிக்கப்பட்ட கங்குலியின் முடிவு
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில்கிறிஸ்ட் -ஹைடன் ஜோடி 14 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாக தொடக்கத்திலேயே ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை கொண்டு வந்த கங்குலிக்கு சற்று பலன் கிடைத்தது. 14 ஓவரை வீசிய ஹர்பஜன் சிங் கடைசி பந்தில் ஹைடனை (37) வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து 20-வது ஓவரை வீசிய ஹர்பஜன் 5-வது பந்தில் அரைசதம் கடந்த கில்கிறிஸ்டை (48 பந்து 8 பவுண்டரி 1 சிக்சர்) வீழ்த்தினார்.
இதன் பிறகு 21-வது ஓவரில் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாண்டிங், டிமியன் மார்ட்டின் இருவரும் மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டு அதிரடியாக விளையா ரன்கள் சேர்ந்தனர். இவர்களை வீழ்த்த இந்திய அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. பாண்டிங் 4 பவுண்ரி 8 சிக்சருடன் 140 ரன்களும், மார்டின் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 88 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் பாண்டிங் அடித்த 140 ரன்கள் உலககோப்பை இறுதிப்போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதேபோல் பாண்டிங் மார்டின் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 30.1 ஓவர்களில் 234 ரன்கள் குவித்து புதிய சாதனையும் படைத்து. இதில் கடைசி 10 ஓவர்களில் 109 ரன்கள் சேர்த்தது.
சரிந்த இந்திய விக்கெட்டுகள்
360 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், சச்சின் டெண்டுல்கர் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய கங்குலி 24 ரன்களுக்கும், முகமது கைப் ரன்கணக்கை தொடங்காமலும் வீழ்ந்தனர். மறுபுறம் சேவாக் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தாலும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து டிராவிட் 47 ரன்களில் வீழ்ந்தார்.
அடுத்து வந்த யுவராஜ் சிங் களமிறங்கிய நிலையில், அரைசதம் நடந்து அசத்திய சேவாக் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 82 ரன்களுக்கு வீழ்ந்தார். சேவாக் அவுட் ஆனதும் இந்திய ரசிகர்களின் நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அடுத்து யுவராஜ் சிங் மட்டும் 24 ரன்களுக்கு அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உலககோப்பையை நழுவ விட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் சேவாக் ரன் அவுட் ஆகி இந்திய அணியின் விக்கெட் சரிவை தொடங்கி வைத்தார். டிராவிட் - சேவாக் ஜோடி 13.2 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் பாண்டிங் ஆட்ட நாயகன் விருதையும் சச்சின் தொடர்நாயகன் விருதையும் வென்றது.
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா – ஆஸ்திரேலியா
2003 உலககோப்பை தொடருக்கு பின், 2007, 2011, 2015, 2019 என 4 உலககோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா(2007, 2015) 2 முறையும் இந்தியா (2011) ஒரு முறையும் கோப்பையை வென்றது. இந்த தொடர்களில் இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளாத நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா - மீண்டும் இறுதிப்போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டியில் வென்று இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் 2003 உலககோப்பை தொடரில் லீக் சுற்றில் இருமுறை இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் நடப்பு உலககோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், லீக் சுற்றில், தனது முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலயாவை தோற்றகடித்துள்ளது.
இதன்படி பார்த்தால் நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 2023 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-வது முறையாக உலககோப்பை தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2003 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கிய ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.