தேர்தல் டெங்கு போய், கிரிக்கெட் இங்கு வந்தாச்சு!
யெஸ்! உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சிப் போட்டிகள் இன்று(மே.24) துவங்கிவிட்டது. தொடர்ந்து, மே30ம் தேதி லண்டனில் தொடங்கும் உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. அதே ஓவல் மைதானத்தில் தான் நாளை(மே.25) நடக்கும் இந்தியா vs நியூசிலாந்து பயிற்சிப் போட்டியை களம் காண விருக்கிறது.
உலகக் கோப்பைத் தொடருக்கு வலிமையான அணியோடு இந்தியா சென்றிருக்கிறது என்றால், அதற்கு பதிலே சொல்ல முடியாது. அது வேற கான்செப்ட்... அப்புறம் பேசுவோம். இப்போ மேட்சுக்கு வருவோம்.
நாளை இந்தியா விளையாடும் கென்னிங்டன் ஓவல் மைதானம் Flat பிட்ச் கொண்டது. பேட்ஸ்மேன்கள் தாறுமாறாக ரன்களை விளாசும் பிட்ச் இது. 'அப்போ ரோஹித்துக்கு ஒரு டபுள் செஞ்சுரி பார்சல்' என்று நீங்கள் ஆர்டர் கொடுக்க நினைப்பது புரிகிறது. ஆனால், அங்கு தான் ட்விஸ்ட்!.
நாளை போட்டி நடைபெறும் நாள் முழுவதும் 40-50 % மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியே மழை பெய்யாவிட்டாலும், கரு மேகங்கள் சூழ வீரர்கள் விளையாட வேண்டியிருக்கும். இதனால், புதிய பந்தில் வீசும் போது, நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்விங் மூலம் இந்திய மேட்ச் வின்னர்ஸ்களை பாடுபடுத்தப் போவது உறுதி!.
தவிர, 'Negative Bowling' மூலமும் இந்திய பேட்ஸ்மேன்களை மேலும் சோதிக்க நியூசி பவுலர்கள் காத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பான பவுலிங்கிற்கு இடையே எப்படியோ நூல் பிடித்து, பவர் ஹிட்ஸ் மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டால், பேட்ஸ்மேன்களின் வலது புறம் அவர்கள் காலை உரசிச் செல்லும் அளவிற்கு துல்லியமாக, தொடர்ச்சியாக பந்து வீசும் திட்டத்தில் உள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்கள் எடுக்க முடியாது. அதேசமயம், பவுலரும் இந்த முறையில் விக்கெட் வீழ்த்துவது கடினமாகும்.
பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் தான் இந்த முறையை பவுலர்கள் பயன்படுத்துவார்கள். ஒருநாள் மற்றும் டி20-களில் பெரியளவில் இது சாத்தியமில்லை. ஏனெனில், கொஞ்சம் தவறினாலும் பந்து வைட் சென்றுவிடும். இருப்பினும், மிகவும் சாமர்த்தியமாக 'Negative Bowing' முறையை இந்த உலகக் கோப்பைத் தொடரில் கையாள காத்திருக்கின்றனர் நியூசி பவுலர்கள்.
சச்சின் டெண்டுல்கருக்கு ஆஷ்லே கில்ஸ் வீசுவாரே... அப்படித்தான்!