மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலககோப்பை அரையிறுதி போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
2023-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதில் தென்ஆப்பிரிக்க 2-வது இடத்தையும் ஆஸ்திரேலியா 3-வது இடத்தையும் நியூசிலாந்து 4-வது இடத்தையும் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து முதல் அரையிறுதிபோட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில், விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை நிறைவு செய்து 117 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. சுப்மான் கில் 80 ரன்களும், ராகுல் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 398 ரன்கள் என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், 3-வது விக்கெட்டுக்கு மீச்செல் - கேப்டன் வில்லியம்சன் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் வில்லியம்சன் (69) ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி சரிவை சந்திதது.
இறுதியில் 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மீச்செல் 135 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீச்சிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ், குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-வது முறையாக உலககோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்
இந்த போட்டியில் இந்தியா சார்பில் 19 சிக்சர், நியூசிலாந்து அணி சார்பில் 11 சிக்சர் என மொத்தம் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலககோப்பை தொடரில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டி பட்டியலில் இந்த போட்டி 5-வது இடத்தை பிடித்துள்ளர். 2019-ல் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டு முதலிடத்திலும், நடப்பு உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டியில் 32 சிக்சர்கள் அடிக்கப்பட்டு 2-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 31 சிக்சர் அடிக்கப்பட்டு 3-வது இடத்திலும், நடப்பு உலககோப்பை தொடரில் இலங்கை தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் 31 சிக்சர் அடிக்கப்பட்டு 4-வது இடத்திலும் உள்ளது.
உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள்
இந்த போட்டியில் இந்தியா 397 நியூசிலாந்து 327 சேர்த்து மொத்தமாக 724 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பட்டியலில் இந்த போட்டி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் நடப்பு உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மோதிய ஆட்டத்தில் 771 ரன்கள் எடுக்கப்பட்டு முதலிடத்திலும், இலங்கை தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் 754 ரன்கள் அடிக்கப்பட்டு 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஒரு உலககோப்பை தொடரில் அதிக வெற்றி
முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2023- உலககோப்பை தொடரில் தனது 10-வது வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி ஒரே உலககோப்பை தொடரில் அதிக வெற்றி பெற்ற 3-வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் முதல் இரு இடங்களிலும் 2003 மற்றும் 2007-ம் ஆண்டு தலா 11 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 2003ம் ஆண்டு 9 வெற்றிகள் பெற்ற இந்தியா 4-வது இடத்திலும், 2007-ம் ஆண்டு 8 வெற்றிகள் பெற்ற இலங்கை அணி 5-வது இடத்திலும் உள்ளது.
அதிகபட்ச வெற்றி
இந்த உலககோப்பை தொடரில் 10 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி அதிக வெற்றி பதிவு செய்த அணிகளின் வரிசையில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 1999 முதல் 2011-வரை 25 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 2011 முதல் -2015 வரை இந்திய அணி 11 வெற்றிகளை பெற்று 2-வது இடத்திலும், நடப்பு உலககோப்பை தொடரில் 10 வெற்றிகளை பெற்று 3-வது இடத்திலும் உள்ளது. 1975-79 வரை 8 வெற்றிகள் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது இடத்தில் உள்ளது.
உலககோப்பை தொடரில் அதிக சிக்சர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 41 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்த உலககோப்பை தொடரில் அவரின் சிக்சர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரு உலககோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலை (26) வீழ்த்தி முதலிடம் பிடித்தார். நடப்பு உலககோப்பை தொடரில் 24 சிக்சர் அடித்துள்ள ஸ்ரேயாஸ் அய்யர் 3-வது இடத்திலும், 2019 உலககோப்பை தொடரில் மார்கன் 22 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், நடப்பு உலககோப்பை தொடரில் 22 சிக்சர் அடித்துள்ள மேக்ஸ்வெல் 5-வது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி
இந்த போட்டியில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமி ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய கும்ளே, டூவர்ட் பின்னி, பும்ரா, சிராஜ், நெஹ்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் உலககோப்பை தொடரில் ஒரு அணிக்கு எதிராக 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சளாளர்கள் பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த உலககோப்பை தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் மீச்செல் ஸ்டார்க் 2 முறை 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒரு உலககோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், இதற்கு முன்பு 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் ஜாகீர்கானை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி 23 விக்கெட்டுகளுடன், பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 27 (2019) விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், மெக்ராத் 26 (2007) விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், இலங்கையின் வாஸ் 23 (2003) விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும், முரளிதரன் 23 (2007) விக்கெட்டுகளுடன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷான் டைட் 23 (2007) விக்கெட்டுகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
உலககோப்பை போட்டியில் சிறந்த பந்துவீச்சு
இந்த போட்டியில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, உலககோப்பை போட்டியில் சிறந்த பந்துவீச்சு வரிசையில், 5-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் 2003-ம் ஆண்டு நமீபியாகவுக்கு எதிராகக ஆஸ்திரேலியாவின் மெக்ரான் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதே 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஆண்டி பீச்சல் இங்கிலாந்துக்கு எதிரான 20 ரன்களுக்கு 7 விக்கெட் வீ்ழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் சவுதி 33 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். 1983-ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வின்ஸ்டன் டெவிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 51 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் உலககோப்பை தொடரில் இதுவரை 4 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி முதலிடத்திலும் 3 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 2-வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் ஒரே உலககோப்பை தொடரில் 3 முறை 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை ஷமிக்கு கிடைத்துள்ளது. தற்போது 4-வது முறையாக இந்திய அணி உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் 1983, 2011 ஆண்டுகளில் கோப்பை வென்ற இந்திய அணி 2003-ல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.