19-வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் மீச்செல் மார்ஷ் டக் அவுட் ஆனாலும், வார்னர் - ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் வார்னர் 41, ஸ்மித் 46 ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால் 110 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருந்த ஆஸ்திரேலியா இறுதியில் 199 ரன்களுக்கு வீழ்ந்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 200 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், .இஷான், ஸ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கோலி – ராகுல் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. அரைசதம் கடந்த கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ராகுல் 97 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் இந்திய அணி உலககோப்பை தொடரை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் பல்வேறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
ராகுல் அதிகபட்ச ரன்
இந்த போட்டியில் 97 ரன்கள் குவித்த ராகுல், உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். 1999-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இலங்கை அணிக்கு எதிராக 145 ரன்கள் குவித்ததே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்த பட்டியலில் 3-5 இடங்கள் முன்னாள் கேப்டன் தோனி வசம் உள்ளது.
குறைந்த ரன்களில் 3 விக்கெட்
200 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே (ஆட்டத்தின் 4-வது பந்து) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அடுத்து 2-வது ஓவரின் 3-வது பந்தில் ரோஹித், கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் என அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் இந்திய அணி 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் குறைந்த ரன்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த முதல் அணி இந்தியா என்ற மோசமான சாதனை அரங்கேறியுள்ளது. இந்த பட்டியலில், 2-வது இதடத்திலும் இந்தியாவே உள்ளது. 2004-ம் ஆண்டு அடிலெய்டில் நடத்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3 மற்றும் 4-வது இடத்தில் இலங்கை அணி உள்ளது.
சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வி
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி இதற்கு முன்பு சென்னையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. 1987-ல் இந்தியா பாகிஸ்தான் இணைந்த நடத்திய உலககோப்பை தொடரில், அக்டோபர் 9-ந் தேதி சென்னயைில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
அதே ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, 1996-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து நேற்று இந்தியாவுக்கு எதிராக சென்னை மைதானத்தில் தனது 4-வது போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் உலககோப்பை தொடரில் சென்னையில் ஆஸ்திரேலியா அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ரன்கள்
உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரர் பட்டியலில் கே.எல்.ராகுல் 3-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான் (117 - 2019) உள்ளார். அடுத்து அஜய் ஜடேஜா (100 ரன் நாட்அவுட் 1999) எடுத்துள்ளர். இவர்கள் இருவருமே ஓவல் மைதானத்தில் ரன்கள் குவித்தனர். நேற்று 97 ரன்கள் குவித்த ராகுல் 3-வது இடத்தில் உள்ளார்.
சச்சினை முந்திய விராட்கோலி
ஐசிசியின் குறிப்பிட்ட ஓவர் தொடரில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் இதுவரை 64 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட்கோலி 2785 ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் 2719 ரன்கள் குவித்து சச்சின் 2-வது இடத்திலும், 2422 ரன்கள் குவித்து ரோஹித் 3-வது இடத்திலும், 1707 ரன்கள் குவித்து யுவராஜ் 4-வது இடத்திலும், 1671 ரன்கள் குவித்து கங்குலி 5-வது இடத்திலும் உள்ளனர்.
20-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா கண்ட முதல் தோல்வி
உலககோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா 20-ம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்த உலககோப்பை தொடர்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியே கண்டனதில்லை என்ற சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2003- உலககோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா, 2007-ம் ஆண்டு ஸ்காட்லாந்தையும், 2011-ம் ஆண்டு ஜிம்பாப்வேயும், 2015-ம் ஆண்டு இங்கிலாந்து, 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா நேற்று 2023-உலககோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.
அதேபோல் 2003-ல் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்தியா 2007-ல் வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்து 2011-ல் ஜிம்பாப்வே, 2015-ல் இங்கிலாந்து, 2019-ல் ஆப்கானிஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய இந்தியா தற்போது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.