Advertisment

79-ல் ஜீரோ... 83-ல் சாம்பியன் : இந்திய அணி உலககோப்பை தொடரில் சாதித்தது எப்படி?

1979-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி 1983- உலககோப்பை தொடரை வென்றது.

author-image
D. Elayaraja
New Update
Indian Cricke

1983 உலககோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்

17-ம் நூற்றாண்டில் இறுதியில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கினாலும், சுமார் 200 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டது. சுமார் 200 வருடங்களுக்கு பிறகு 1970-களில் ஒருநாள் போட்டி தொடங்கப்பட்டது. இதில் 1975-ம் ஆண்டு முதல் உலககோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டது.

Advertisment

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் இலங்கை, ஈஸ்ட் ஆப்பரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

1979- 2-வது உலககோப்பை தொடரில் இந்தியா ஜீரோ

முதல் உலககோப்பை தொடரில் ஈஸ்ட் ஆப்பிரிக்கா அணியுடனான ஒரு போட்டியில் மட்டுமே வென்ற ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து 1979-ம் ஆண்டு 2-வது உலககோப்பை தொடர் மீண்டும் இங்கிலாந்தில் ஜூன் 9- முதல் ஜூன் 21 வரை நடத்தப்பட்டது.

1983 winning

இந்த தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆகிய 6 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், தகுதிச்சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி 7-வது அணியாக போட்டியில் பங்கேற்றது. அதேபோல் அந்த போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கனடா அணி முதல் முறையாக உலககோப்பை தொடரில் விளையாட வாய்ப்பை பெற்றது.

தொடர் தோல்விகளை கண்ட இந்தியா

மீண்டும் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 190 ரன்கள் எடுத்தது. குண்டப்பா விஸ்வநாத் 75 ரன்கள் குவித்திருந்தார், 191 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டன் கிரீனிட்ஜ் 106 ரன்கள் குவித்தார்.

2-வது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அடுத்து இலங்கை அணியுடன் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இறந்திய அணி வெற்றிக்கணக்கை தொடங்காமலே தொடரில் இருந்து வெளியேறியது. மறுபுறம் பாகிஸ்தான் அணி முதல்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தாலும், ஆஸ்திரேலியா கனடா அணிகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

இங்கிலாந்து பாகிஸ்தான், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய அரையிறுதி சுற்றில், வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானையும், இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதல் தொடரை போலவே இந்த தொடரிலும் தோல்வியை சந்தித்ககாமல் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

1983 toss

83-ல் எழுச்சி பெற்ற இந்திய அணி

முதல் 2 உலககோப்பை தொடர்களில் லீக் சுற்றில் வெளியேறிய இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் களமிறங்கியது. இதில் கனடா அணி நீக்கப்பட்டு முதல் முறையாக ஜிம்பாப்வே அணி தொடரில் இடம் பெற்றிருந்தது, 8 அணிக்ள பங்கேற்ற இந்த தொடரில் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றிருந்தது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 262 ரன்கள் குவித்தது. யாஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்திருந்தார். தொடர்ந்து 263 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 228 ரன்களில் சுருண்டது.

ஆண்டி ராபர்ட் 37 ரன்கள் குவித்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். அதை தவிர்த்து இந்திய அணி எக்ஸ்டரா வகையில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தது, இந்திய அணியில் ரவி சாஸ்திரி ரோஜர் பின்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். 2-வது போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் மோதிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியை சந்தித்து.

Srikanth

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 320 ரன்கள் குவித்தது. திரிவீர் சேப்பல் 110 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கபில்தேவ் 40 ரன்களும், ஸ்ரீகாந்த் 39 ரன்களும், மதன் லால் 27 ரன்களும் குவிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 158 ரன்களில் சுருண்டது. அடுத்து மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா vs ஜிம்பாப்வே

முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா 2 போட்டிகளில் வென்று சம புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது 5-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சந்தித்த தோல்வியினால் இந்திய அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமானது. ஆனாலும் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் தொடக்க வீரர்களான கவாஸ்கர், ஸ்ரீகாந்த் இருவரும் ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து அமர்நாத் 5, சந்தீப் பட்டேல் 1, யாஷ்பால் சர்மா 9 ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இந்திய அணிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

Kabil Dev 175

கலக்கிய கபில்தேவ்

6-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கபில்தேவ் ரோஜர் பின்னி இருவரும் விக்கெட் தடுப்பை ஏற்படுத்தி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தபோது ரோஜர் பின்னி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவி சாஸ்திரி 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மதன்லால் 17 ரன்கள் குவித்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடிய கபில்தேவ் 175 (138 பந்து 16 பவுணட்டரி 6 சிக்சர்) ரன்கள் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தார். அவருக்கு இறுதிக்கட்டத்தில் ஒத்துழைப்பு கொடுத்த கிர்மனி 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கபில்தேவ் இந்த போட்டியில் எடுத்த சதமே இந்தியர் ஒருவர் உலககோப்பை தொடரில் எடுத்த முதல் சதமாகவும், அதிக ரன்னாகவும் பதிவானது. இந்த போட்டியில் இந்திய அணி 268 ரன்கள் குவித்த நிலையில், 269 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 235 ரன்களில் வீழ்ந்தது. மதன்லால் 3 விக்கெட்டும் ரோஜர் பின்னி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அரையிறுதிசுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் மதன்லால் ரோஜர் பின்னி இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை சந்தித்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீ்ழ்த்தியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 213 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கபில்தேவ் 3 விக்கெட்டுகளும், ரோஜர் பின்னி அமர்நாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி யாஷ்பால் சர்மா சந்தீப் பட்டேல் அரைசதம் கடந்து அசத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Kabil Dev2

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் : இறுதிப்போட்டி

2-வது அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஹாட்ரிக் சாம்பியன் ஆகும் கனவில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கவாஸ்கர் 2 ரன்களில் வீழ்ந்தாலும், ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவித்தார். இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

அமர்நாத் 26, சந்தீப் பட்டேல் 27, மதன்லால் 17, கபில்தேவ் 15, கிர்மணி 14 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் இந்திய அணி 183 ரன்களில் சுருண்டது. 184 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்டன் க்ரீனெஜ் 1 ரன்னில் வெளியேற 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விவியன் ரிச்சர்ட்ஸ் பயத்தை ஏற்படுத்தினார்.

கிடைக்கும் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த ரிச்சர்ட்ஸ், 28 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 33 ரன்கள் குவித்து மதன்லால் பந்துவீச்சில் கேப்டன் கபில்தேவின் அற்புதமாக கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். மதன்லால் வீசிய ஃபுல் ஷாட் பந்தை ரிச்சர்ட்ஸ் சிக்சருக்கு விரட்டி முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் பட்டு மேலே பறந்தபோது சுமார் 20 மீட்டர் தூரம் ஓடிச்சென்ற கபில்தேவ் டீப் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் பிடித்தார்.

Viv Richards

கபில்தேவின் இந்த கேட்ச் 83 உலககோப்பை தொடரின் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு டுஜோன் 25, மார்ஷெல் 18 ஆகியோர் இரட்டை இலக்கை தொட்டாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் முறையாக உலககோப்பை சாம்பியனாக மாறியது.

சாதனை கேப்டன் கபில்தேவ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் கடைசி கட்ட விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு ரன்கள் குவித்த கபில்தேவ், 72 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த நிலையில், 9-வது விக்கெட்டுக்கு கிர்மணியுடன் இணைந்து 126 ரன்கள் குவித்தது 27 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒரு சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 2010-ம் ஆண்டு இலங்கை அணியின் மேத்யூஸ் மலிங்கா ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 132 ரன்கள் குவித்து முறியடித்தது.

உலககோப்பை தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித் கபில்தேவ் 8 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தார். அதேபோல் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை தொடர்ந்து 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி 7-வது இடத்தை பிடித்திருந்தார்.

Kabil Dev

இந்த தொடரில் இந்தியாவின் ரோஜர் பின்னி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்திலும், மதன்லால் 17 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் இருந்தனர். இந்த தொடரில் 175 ரன்கள் குவித்ததன் மூலம் 83 உலககோப்பை தொடரில் தனிநபராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை 12 உலககோப்பை தொடர் நடந்துள்ளது. இதில் இந்தியா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், 13-வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment