இதுதான் வலி! கங்குலி, தோனிக்கு அடுத்தபடியாக இன்று ரியல் வலியை உணர்ந்த கோலி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணியான இந்தியா, 0-2 என இழந்துள்ளது

அன்பரசன் ஞானமணி

2014ம் ஆண்டு, திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகிறது… ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் விளையாட சென்றிருந்த இந்திய அணிக்கு கேப்டனாக பதவி வகித்த மகேந்திர சிங் தோனி, திடீரென பாதி தொடரிலேயே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறார்.

இரண்டாவது அறிவிப்பு, 2016ம் ஆண்டு….. இம்முறை, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவிக்கிறார்.

இந்த இரண்டு அறிவிப்புக்குமே, தோனி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தெளிவான நேரிடையான பதிலும் இல்லை.

இந்த பொறுப்புகள் அனைத்திற்கும் கேப்டனாகிறார் விராட் கோலி. இதைத் தொடர்ந்து கோலியும் ஜெயிக்கிறார்.. இந்தியாவும் ஜெயிக்கிறது. அட, சூப்பர்ப்பு என்று பார்த்தால், வெற்றிகளில் பெரும்பாலானவை இந்திய மண்ணில் கிடைத்திருக்கிறது.

மிஞ்சி மிஞ்சிப் போனால், இலங்கையிலோ, வெஸ்ட் இன்டீஸிலோ இந்தியா தனது வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது.

ஆனால், இப்போதுதான் விராட் கோலி, ஒரு கேப்டனுக்கான உண்மையான வலியையும், வேதனையையும் அனுபவித்து இருக்கிறார். இல்லை… இல்லை… அனுபவிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணியான இந்தியா, 0-2 என இழந்துள்ளது. உலகின் டாப் டெஸ்ட் அணி கேப்டன் என்கிற முறையில் விராட் கோலிக்கு இது அவமானம் மட்டும் இல்லை, அவர் மீது ரசிகர்கள் வைத்திருந்த அபரிதமான நம்பிக்கையிலும் விரிசல் விழுந்துள்ளது எனலாம். பாவம்! இதற்கு விராட் என்ன செய்வார்!? அவர் தென்னாப்பிரிக்காவை, அவர்கள் மண்ணிலேயே எதிர்த்தது அவர் குற்றம் இல்லையே!

இங்கே பிசிசிஐ-யிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்.

முதல் கேள்வி: தோனியை நீக்கிவிட்டு, அல்லது விலக வற்புறுத்தி விராட் கோலியை கேப்டனாக்கினீர்களே…? உங்களால் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை டெஸ்ட் போட்டிகளில் இதுவரை உருவாக்க முடிந்ததா?

இரண்டாம் கேள்வி: இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தியாவில் ஸ்பின் பிட்ச்களையே அதிகம் வடிவமைத்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தொடர்களில் அடி வாங்கிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் ?

மூன்றாவது கேள்வி: நேற்று தோனி, இன்று கோலி, நாளை?

வர்த்தக ரீதியில் இருந்து கிரிக்கெட்டை பார்க்காத வகையில், தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கோப்பை என்ற பேச்சுக்கே நமக்கு இடமில்லை.

இந்த தோல்வி எதிர்பார்த்தது தான்!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close