உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டு நாட்களாக நடந்த முதல் அரையிறுதி போட்டியில், மோசமான ஆட்டத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியாவின் கனவு தகர்ந்துவிட்டது. ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. பிர்மிங்ஹாம் எட்பாக்ஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக, வார்னர் 9 ரன்களில் நடையை கட்டினார். ஆஸி., 14 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. 224 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியினால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது.
புதிய சாம்பியன் யார் : 5 முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியும், 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. 14ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இங்கிலாந்து அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்று 3 முறையும் தோல்வியை தழுவியுள்ளது.
நியூசிலாந்து அணி, இதுவரை 2 முறை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்று 2 முறையும் தோல்வியை தழுவியுள்ளது.
முதல்முறையாக, இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் களம் காண உள்ளன. இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் ஆகி, கோப்பை கணக்கை முதலில் துவக்குவது இங்கிலாந்தா அல்லது நியூசிலாந்து அணியா என்பதற்கான விடை இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.