ICC World Test Championship 2021-2023 Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இலங்கை அணி நியூசிலாந்து 11 அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: யாருக்கு வாய்ப்பு?
இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணிகளுக்கான போட்டியில் கடும் போட்டியாளராக இலங்கை அணி மாறியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே இத்தொடரில் நடந்த 2 போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைவதில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இந்தூர் டெஸ்ட் தோல்வி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் 68.52 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவலில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தற்போதைய டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வீழ்த்த வேண்டும்.

இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேற, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும். அதாவது, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று வெற்றி பெற்றால் கூட, இந்தியா அகமதாபாத் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
4வது டெஸ்டில் இந்தியா டிரா செய்தலும் கூட தகுதி பெற வாய்ப்புள்ளது. எனினும் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றாலும், நியூசிலாந்தை வீழ்த்தினால் இலங்கையால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதால் அது இன்னும் போதாது. எனவே, இந்தியா அகமதாபாத் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை என்றால், இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும். மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதிதான் தொடங்குகின்றன. எனவே, இந்த இரு போட்டிகளின் முடிவுகளுக்கவும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil