World Test Championship final 2023 Tamil News: 2022 - 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுவது வழக்கம். அதன்படி, இந்திய மண்ணில் நடந்து வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள போகும் 2வது அணி எது? என்பதற்கான போட்டி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடுமையாக இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3வது இடத்திலும் இருந்தன. இந்தியா தகுதி பெற, ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது ட்ரா செய்ய வேண்டும் அல்லது நியூசிலாந்து மண்ணில் நடக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை ஒரு போட்டியில் தோற்க வேண்டும் என்று இருந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா - நியூசிலாந்து vs இலங்கை
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் கடைசி போட்டியும், நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியும் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் தற்போது ட்ராவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால், நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்திற்கான முடிவு கிடைத்து விட்டது.
இந்த அணிகள் மோதிய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்தும், முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியும் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், நியூசிலாந்துக்கு அதன் முதல் இன்னிங்சில் டேரில் மிட்சல் சதம் விளாசி கொடுத்து அணியின் ரன்ரேட் உயர உதவினார். இதன்பிறகு, 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இலங்கை 302 ரன்கள் எடுத்து, நியூசிலாந்துக்கு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனால், இன்று கடைசி நாளான 5ம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது. இலங்கை அதன் வெற்றிக்காக பந்துவீச்சு தாக்குதல் தொடுக்க அதை நியூசிலாந்து வீரர்கள் தும்சம் செய்தனர். குறிப்பாக, முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் சதம் விளாசி மிரட்டினார். மேலும், அணியை வெற்றி நோக்கி அழைத்ததும் சென்றார். ஒருபுறம் விக்கெட் சரிவு இருந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி இலங்கையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆடாமலே ஜெயிச்ச இந்தியா - இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த முடிவுக்காக நீண்ட நாளாக காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்து மழை பொழிந்தும் வருகிறார்கள்.
With Sri Lanka's defeat to New Zealand, Rohit Sharma's men cannot drop below second position. #WTC23
— ICC (@ICC) March 13, 2023
இந்தியாவைப் பொறுத்தவரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றுள்ளது. 2019/21 சுழற்சியில் நடந்த இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. மறுபுறம் ஆஸ்திரேலியா, கடந்த முறை 0.8 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.